கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் டென்மார்க்கின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த பனி படர்ந்த ஆர்க்டிக் நிலப்பகுதியான கிரீன்லாந்து தற்போது தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது. தனிநாடாக அங்கீகாரம் பெறுவதற்கான இறுதிப் படியாக இந்நிலை கருதப்படுகிறது. தற்போது காவல் துறை, மட்டுப்படுத்தப்பட்ட நிதி நிர்வாகம் போன்றவை மட்டுமே கிரீன்லாந்தின் வசம் உள்ளன.
கிரீன்லாந்தில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தன்னாட்சி அளிக்கப்பட உள்ளூர் மக்கள் பெருவாரியான ஆதரவு தெரிவித்தனர். கூபிக் கிளீஸ்ட் என்ற உள்ளூர் தலைவர் கிரீன்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருப்பினும், வெளியுறவுக் கொள்கைகள், இராணுவம் போன்ற அதி முக்கியம் வாய்ந்த துறைகள் டென்மார்க் வசமே உள்ளன.
கிரீன்லாந்தின் பழங்குடிகள் இனியூட்கள் என அழைக்கப்படுகின்றனர். கிரீன்லாந்தில் பெருமளவு எண்ணெய்வளம் இருந்தாலும் அவற்றை வெளியில் எடுக்க ஆகும் செலவு தற்போதைக்கு மிக அதிகம் என்பதால் அதனை இதுவரை டென்மார்க் வெளியில் எடுப்பது பற்றிக் கருதவில்லை.
உலகம் சூடாகிவருவதால் இனிவரும் காலங்களில் எண்ணெய், கனிம வளங்கள் எடுப்பது அவ்வளவு சிரமமாக இராது என வல்லுநர்கள் கருதுவதால் வருங்காலத்தில் கிரீன்லாந்து தனிநாடாகப் பிரகடனப் படுத்தப்படலாம்.
தற்போதைக்கு கிரீன்லாந்துக்கு டென்மார்க் பெரும் நிதியுதவி வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




