ஏர் ஃபிரான்ஸ் AF 447 கடந்த ஜூன் 1 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து அதில் பயணம் செய்த அனைவரும் பலியானது இன்னமும் விசாரணையில் இருந்து வரும் நிலையில் விபத்துக்கான காரணமாக வேக உணர்விகள் சொல்லப்படுகின்றன. இந்த விமானம் ஏர்பஸ் A330 ரக விமானம் என்பது நாம் அறிந்ததே. கடந்த சில நாட்களாக A330 ரக விமானங்கள் தொடர்பாக ஓரிரு நிகழ்வுகள் அடிவயிறு கலங்கும் வண்ணம் உள்ளன.
நிகழ்வு 1:
சென்ற ஜூன் 15 அன்று, ஏர்பஸ் A330-300 ரக கத்தாய் பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் CX-751, தாய்லாந்துத் தலைநகர் பாங்காக்கிலிருந்து புது தில்லிக்குப் புறப்பட்டது. விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களில் விமானத்தின் வலப்புற எஞ்சின் பெரும் சத்தத்துடன் செயலிழந்தது. அந்த எஞ்சினிலிருந்து தீப்பிழம்புகள் வெளிவந்ததால் விமானிகள் பதற்றமடைந்து இடது புற எஞ்சின் துணையுடன் பாதுகாப்பாக பாங்காக்கிலேயே விமானத்தைத் தரையிறக்கினர். விமானத்தில் வலப்புற எஞ்சின் முழுமையாக எரிந்து போயிருந்தது. பயணியர் அடுத்த நாள் வேறொரு விமானத்தில் புது தில்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிகழ்வு 2:
சென்ற ஜூன் 18 அன்று ஏர்பஸ் A330-200 ரக ஏர் சைனா விமானம் CA-939 சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ரோம் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. பறக்கத் தொடங்கிய இரு மணிநேரங்கள் கழித்து விமானத்தில் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் பழுது இருப்பதாக எச்சரிக்கை சமிக்ஞைகள் வரவே விமானிகள் மீண்டும் பெய்ஜிங்கிற்கே விமானத்தைத் திருப்பி வந்து பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கினர். ஏழரை மணிநேரம் கழித்து இன்னொரு ஏர்பஸ் A330-200 மூலம் பயணியர் ரோம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிகழ்வு 3:
நேற்று (ஜூன் 20) ஏர்பஸ் A330-200 ரக BMI பிரிட்டிஷ் மிட்லேண்ட் விமானம் BD-762 பிரிட்டன் தலைநகர் லண்டனிலிருந்து டெல் அவிவில் தரையிறங்க முயலும் போது மின்னல் தாக்கியதால் விமானத்தின் இறக்கையின் சிறு துண்டு உடைந்து விட்டது. இருப்பினும் விமானம் பாதுகாப்பகத் தரையிறக்கப்பட்டது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




