1947 ஆம் ஆண்டு பிரிட்டனின் வான் எல்லையில் பறந்து கொண்டிருக்கையில் தனது விமான ரடாரில் தெரிந்த பறக்கும் தட்டு ஒன்றைச் சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவலை அப்போர் விமானத்தின் விமானி தற்போது வெளியிட்டுள்ளார். பிரிட்டனின் தகவல் அறியும் சட்டத்தின் படி இத்தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
போர் விமானங்களை இயக்கிய ஓய்வுபெற்ற விமானியான மில்டன் டோரஸ் என்பவர் (வயது 77) இதைப்பற்றிக் குறிப்பிடுகையில், " அமைதியான ஓர் இரவில் பிரிட்டனின் மீது பறந்து கொண்டிருக்கும் போது என் விமான ரடாரில் பறக்கும் விமானம் தாங்கிக் கப்பல் போன்ற பிரமையைத் தரும் ஒரு பொருள் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்று சுட்டுவீழ்த்துமாறு எனக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது; நான் வேகமாகத் துரத்தி 24 ராக்கெட் குண்டுகளை அதன் மீது செலுத்தியும் சில நொடிகளிலேயே அது மணிக்கு 12,000 கிமீ வேகத்தில் சென்று மறைந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
பறக்கும் தட்டுகள் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துகள் இருந்து வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் அவை மாயையாகவும், பிரமையாகவும் இருக்கின்றன. மில்டன் குறிப்பிட்ட இந்நிகழ்வு எந்த அளவுக்கு உண்மை என்பது வருங்கால ஆராய்ச்சிகள் மூலம் தெரியவரலாம்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




