- வாசகர் ஜமால்
அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் இதனால் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். நாட்டின் பணபெருக்க விகிதம் பூஜ்யத்திற்குக் கீழே சென்று விட்ட போதிலும் கூட, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையாமல் அதிகரிப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பணப்பெருக்க மதிப்பினைக் குறித்து சமூகத்தில் தெளிவான அறிவின்மை காணப்படுகிறது. இதனை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் காண்போம்.
2009 ஜனவரி மாதம் பணப்பெருக்க விகிதம் பூஜ்யம் என வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்றால், அதே ஒரு கிலோ தக்காளி, இன்றைய தேதியில் பணப்பெருக்க விகிதம் பூஜ்யத்திற்கு மேலே அதிகரித்திருக்கும் எனில் 5 ரூபாயை விட அதிகம் கொடுத்தாலே வாங்க முடியும். அதே நேரம் பணப்பெருக்க விகிதம் பூஜ்யத்தை விட குறைந்திருக்கும் எனில், 5 ரூபாயை விட குறைந்த விலைக்குக் கிடைக்கும்; கிடைக்க வேண்டும். அதாவது, முன்பு 5 ரூபாய்க்கு வாங்கியப் பொருள் இப்போது 5 ரூபாயை விட அதிகமாகக் கொடுத்தால் தான் கிடைக்கிறது எனில், நாணய பெருக்கம் அதிகரித்திருக்கிறது என்பது பொருள். அதுவே, 5 ரூபாயை விடக் குறைவான விலைக்குக் கிடைக்கிறது எனில் முன்பை விட நாணய பெருக்க விகிதம் குறைந்துள்ளது என்பது பொருள்.
தற்பொது, இந்திய நாணயத்தின் மதிப்பு பூஜ்யத்தை விட குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனில், அன்றைய விலையை விட இன்றைய தேதியில் பொருட்களின் விலை மிக அதிக அளவில் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அன்றைய தேதியில் உள்ள விலையை விட மிக அதிக அளவுக்கு நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்ந்தே செல்கிறது. அரசின் கணக்கீடுகள் படி பொருட்களின் விலை வெகுவாக இறங்கியிருக்க வேண்டும். ஆனால், நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருக்கிறது. இது, அடிதட்டு மக்களுக்குச் சந்தைகளில் பொருட்களை விற்போர் பொருட்களின் விலைகளை இறங்கி விடாமல் ஒரு கட்டுக்குள் திட்டமிட்டே வைத்துள்ளனரோ என்ற சந்தேகத்தையே கிளப்புகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து காணப்பட்ட வேளையில் நாட்டில் என்ன விலைக்குப் பொருட்கள் விற்கப்பட்டதோ அதே விலைக்கு, கச்சா எண்ணெயின் விலை சுமார் 200 சதவீதம் குறைந்தப் பின்னர் கூட குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதற்கு பெரிய நிறுவனங்களின் இலாப விகிதம் குறைந்து விடாமல் பார்த்துக் கொண்டதில் அரசின் பங்கும் அதிகம்.
அதே போன்ற நிலை தான் இதிலும் கடைபிடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் இன்று மக்களிடையே பரவலாக எழ ஆரம்பித்து விட்டது.
நாட்டின் நாணய பெருக்க விகிதம் குறைந்தப் பின்னர் கூட, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வில்லையே என்ற கேள்விக்கு அரசின் தரப்பிலிருந்து, "தற்போதைய பணப்பெருக்க மதிப்பு மொத்த விலை குறியீட்டின்படி நடத்தப்பட்டதாக" சப்பைகட்டு கட்டப்படுகிறது.
இதனைக் கேட்கும் ஊடகங்களும் மற்றவர்களும் ஆமாம் சாமி போடுகின்றனர். பணப்பெருக்க விகிதம் மொத்த விலை குறியீட்டின்படி கணக்கிடப்பட்டிருந்தால் கூட, பூஜ்யத்துக்கும் கீழே பணப்பெருக்க மதிப்பு போயிருப்பது, மொத்த விலையில் இறங்குமுகம் இருப்பதைத் தானே காட்டுகிறது? எனில், அது சில்லறை விலை குறியீட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே? ஏன் ஏற்படுத்தவில்லை? என்ற கேள்வியை அரசின் சட்டையைப் பிடித்து எவரும் கேட்டது போல் தெரியவில்லை.
மொத்த விலை குறியீடு இறங்கு முகமாக இருப்பதால் தான் பணப்பெருக்க மதிப்பு குறைந்தது, ஆகவே தான் சில்லறை விலையில் குறைவு ஏற்படவில்லை என்று கூறுவது மக்களைச் சுத்த மடையர்களாக்கும் விளக்கமாகும். மொத்த விலை குறைந்தும் சில்லறை விலை குறையவில்லை எனில், அதன் காரணம் மொத்த விலைக்கு எடுக்கும் பெரிய வியாபாரிகள்/நிறுவனங்கள் சில்லறை விலையைக் குறைக்க முன்வராமல் கொள்ளை இலாபம் அடிக்கின்றன என்பதே இதிலிருந்து விளங்க முடிகிறது. எவ்வாறு உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோலின் விலை குறையாமல் பார்த்துக் கொண்டதில் அரசின் ஒத்துழைப்பு இருந்ததோ அதே போன்று இவ்விஷயத்திலும் பெரு முதலாளிகளுக்கு அரசின் ஒத்துழைப்பு இருக்கிறது என்றே கணிக்க முடிகிறது.
இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையாமல் அதிகரித்துச் செல்வதன் காரணம் என்ன என சில சில்லறை வியாபாரிகளிடம் விசாரித்த போது,
1. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளினால் தற்போது விவசாயிகள், அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியை விட்டு வெகுவாக பின்வாங்கி வருகின்றனர். இதனால், ஆண்டுக்குச் சுமார் 10 சதவித உற்பத்தி குறைந்து வருகிறது.
2. ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசே நேரடி கொள்முதல் செய்வதால், முன்னர் போன்று பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்குப் பெற முடிவதில்லை.
3. அத்தியாவசிய பொருட்களின் சந்தைகளிலும் பங்கு சந்தை போன்று பெரிய நிறுவனங்கள் நேரடியாக இறங்கி ஊக வியாபாரங்களை அதிகரித்து விட்டன. இதனால், பொருட்களின் சாதாரண விலையை விட, அதிக விலைக்கே கொள்முதல் செய்ய முடிகிறது.
இவையே சந்தையில் சில்லறை வியாபாரத்தில் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டு செல்வதற்கான காரணங்களாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று காரணங்களை உன்னிப்பாக ஊன்றி கவனித்தப் போதிலும் கூட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு அரசும் பெரு நிறுவனங்களுமே காரணமாக இருப்பது விளங்க முடிகிறது.
மொத்த கொள்முதல் விலை குறியீடு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் நாட்டின் பண பெருக்க விகிதம் பூஜ்யத்திற்கு கீழே சென்று விட்டது. அதாவது அரசுக்கும் பெரு நிறுவனங்கள்/முதலாளிகளுக்கும் பொருட்கள் மிக மிக குறைந்த விலைக்கு மொத்தமாக கொள்முதல் செய்ய முடிகிறது.
சந்தைகளில் சில்லறை விலை தலைக்கு மேலே ஏறிக் கொண்டு செல்கிறது. அதாவது சில்லறை வியாபாரிகளுக்கு அந்த விலைக்கு விற்றாலே கட்டுப்படியாகும் விலைக்குத் தான் பொருட்கள் கிடைக்கிறது என்று அர்த்தம். இதிலிருந்து அரசும் பெரு நிறுவனம்/முதலாளிகளும் இணைந்தே அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையில் கொள்ளை இலாபம் ஈட்டுவது அப்பட்டமாக தெரிகிறது.
பெரு நிறுவனங்களின் நன்மைக்காக ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசின் இப்போக்கு கண்டிக்கத்தக்கது. அரசு உடனடியாக இவ்விஷயத்தில் மக்களின் வயிற்றில் அடிக்காமல், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் வயிற்றில் பாலை வார்க்குமா?

எழுதியவர்: selvan, December 28, 2009
P. Selvan, Perumanallur, Tirupur
| < முந்தையது | அடுத்தது > |
|---|




