தலைப்பைப் பார்த்து ஏதோ கில்மா சங்கதி என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி நாள்தோறும் உடலுறவு கொள்ளும் ஆண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளாத ஆண்களை விட கருத்தரிப்புத் தங்கும் திறன் உள்ள விந்தணுக்களை உற்பத்தி செய்ய வல்லவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தியவர்கள் அனைவரும் ஓரிரு முறையாவது கருத்தரிப்பில் பிரச்னை உள்ளவர்கள் என்பதால் இது ஓரளவுக்கு நம்பகமான முடிவாகக் கருதலாம் என இந்த ஆய்வை மேற்கொண்ட சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் டேவிட் கிரீனிங் தெரிவித்துள்ளார்
கருத்தரிப்பில் சிக்கல் உள்ள தம்பதியர் தமக்குள் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டு வரவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். கருத்தரிப்புத் தங்காமல் இருப்பதற்குப் பொதுவாகப் பெண்களை மட்டும் குறைசொல்வது பொதுவாக உள்ளது. ஆனால், ஆண்களின் பங்கும் இதில் பெருமளவு உள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
நீண்ட நாட்கள் வெளியேறாமல் விரைகளிலேயே தங்கி இருக்கும் விந்தணுக்களின் மரபணுக்கள் அவை இருக்கும் சூழலில் 7 நாட்களுக்கு மேல் இருந்தால் அவற்றின் மரபணுக்கள் (DNA) சேதமடைந்துவிடும் என்றும், இது கருவின் நிலைத் தன்மையைப் பெருமளவு பாதிக்கும் என்றும், ஒருவேளை கரு நிலை கொண்டாலும் அதன் வளர்ச்சி சவாலாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களின் சினைமுட்டைகள் உருவாகும் காலத்தில் ஒரு நாளிலேயே பலமுறை உடலுறவு கொள்வதும் கரு நிலைப்புத் தன்மையை உறுதி செய்யும் என்று அவர் கூறினார். "ஆறு என்பது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்; நிற்கக் கூடாது" என்று சிலேடையாகக் கூறினார்.
டாக்டர் கிரீனின் இந்த ஆய்வு சுவாரசியமாக இருந்தாலும், இக்குறை பொதுவாக இல்லாத ஆண்களுக்கு இந்த உபாயம் பயனளிக்குமா என இத்துறை வல்லுனரான இன்னொரு மருத்துவர் ஆலன் பேஸி ஐயம் எழுப்பினார். ஆனாலும் கருத்தரிப்பைக் குறிக்கோளாகக் கொண்ட தம்பதியர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ள வேண்டும் என்ற டாக்டர் கிரீனின் அறிவுரை உண்மையின் பயனுடையது என்று அவர் தெரிவித்தார்.

| < முந்தையது |
|---|






good and natural and scientifical truth