பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதாகும் மார்ட்டின் ஜோன்ஸ் என்ற கட்டிட வேலை செய்யும் ஒருவர், ஒரு விபத்தில் தனது கண்பார்வையை இழந்தார். கொதிக்கும் அலுமினியம் தெறித்து முகத்தில் பட்டதால் தனது இரு கண்களின் கண் பார்வையையும் இழந்தார். 12 ஆண்டுகளாகக் கண்பார்வையின்றி வாழ்ந்து வந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கில் என்ற 50 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மலர்ந்து இரு மனம் இணைந்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, மார்ட்டினுடைய கண்பார்வையைச் சோதித்த மருத்துவர் குழு ஒன்று அவர் கண்பார்வை மீளப் பெற வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினர்.
ஆனால், அவரது கண்ணின் லென்சை மீண்டும் நிலைநிறுத்த அவரது உடலில் இருந்தே ஒரு பாகம் தேவைப் பட்டது. இதற்காக அவரது முன் பல்லை அறிவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து அதனையே ஒரு தாங்கியாகப் பயன்படுத்தி அவரது லென்சை மீண்டும் நிலை நிறுத்தினர்.
மிகவும் சிக்கலான எட்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மார்ட்டினின் வலது விழி லென்சை நிலை நிறுத்துவதில் வெற்றியும் கண்டனர். மார்ட்டின் தன் கண்பார்வையை 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெற்றார். முதன்முதலில் தன் மனைவியைத் தான் அவர் காண விரும்பினார்.
கட்டுகள் பிரிக்கப்பட்டு உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய ஜோன்ஸ், தன் மனைவியை முதன் முதலாகக் கண்டு ஆனந்தத்தில் திக்குமுக்காடினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




