1600 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமைவாய்ந்ததாகக் கருதப்படும் பைபிள் தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த பைபிள் சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் சினாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் தொடக்கம் எவ்வாறு இருந்தது என அறியும் காலக்கண்ணாடியாக இந்த பைபிள் இருக்கும் எனத் துறை வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். இது கோடெக்ஸ் சினாய்டிக்கஸ் என்று அழைக்கப்படுகிறது.
மிகப் பழமையான இந்த பைபிள், ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கை உடையவர்களுக்கு அசவுகரியம் தரும் விபரங்களை உள்ளடக்கி இருக்கிறது. பைபிளில் தவறுகள் இருக்க வாய்ப்பில்லை என நம்புபவர்களுக்கு சங்கடம் தரும் கேள்விகள் இந்த பைபிளில் இருக்கின்றன.
முதலில் இந்த பைபிளில் யூத இனத்திற்கு எதிரான கடும் வாசகங்கள் உள்ளன. இயேசுவைக் கொன்றது யூதர்களே என்று இதில் குறிப்பிடப் பட்டுள்ளது. நவீனகால பைபிள் பிரதிகளில் ரோமானியர்கள் தான் இயேசுவைக் கொன்றனர் என்ற விபரம் உள்ளது. இந்த மூல வடிவில் கிறிஸ்தவர்களிடம் இது யூதர்களின் மீதான காழ்ப்பையும் குரோதத்தையும் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.
அடுத்ததாக இந்த பைபிளில் நவீன காலப் பிரதிகளை விட கூடுதலாக இரு தொகுதிகள் உள்ளன. அவை அப்படியே பின்பற்றப்பட்டால், யூதர்கள் கடும் இன்னல்களைச் சந்திக்க வேண்டிவரும் என பைபிள் ஆய்வாளர் பார்ட் எர்மான் (Bart Ehrmann) கூறியிருக்கிறார்.
இந்தப் பழமையான பைபிளில் முடமானவரைக் குணப்படுத்தும் போது இயேசு கடும் கோபத்துடன் இருந்தார் என எழுதப் பட்டுள்ளது. நவீனகால பைபிள்களில் இயேசு மிகுந்த கனிவுடன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இயேசு கால மனிதர்கள் ஒரு விபச்சாரியைக் கல்லெறிய முனையும் போது "உங்களில் குறை ஏதும் இல்லாதவர் முதல் கல்லை எறியட்டும்" என்ற பிரபலமான வாசகமும், அவர்கள் தன்னைத் துன்புறுத்தும் போது "தான் இன்ன செய்கிறோம் என அறியாமல் செய்யும் இவர்கள் பிழையை பரமபிதாவே மன்னியும்" என்ற இன்னொரு பிரபலமான் வாசகமும் இந்தப் பழமையான பைபிளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இதனால் பல சிக்கல்களை இந்த பைபிள் சந்திக்கலாம் என்று கருதினாலும், மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும், பைபிள் என்பது வாழும் அற்புதம், மாற்றம் என்பது அதற்குப் புதிது இல்லை என்றும் இன்னொரு பைபிள் ஆய்வாளர் டேவிட் பார்க்கர் கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




