ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை நிலையாக வைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திட்டங்களோ அல்லது ஒதுக்கீடுகளோ இவ்வாண்டின் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படாதது வளைகுடாவாழ் இந்தியர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளதைக் காணமுடிகிறது.
பெரும்பாலான வெளிநாடுவாழ் இந்தியர்களின் பார்வையில் மத்திய பட்ஜெட் உண்மை நிலையைப் பிரதிபலிக்காத, பெரும்பாண்மை உள்நாட்டு மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காத வகையில் சில சலுகைகளை அறிவிக்கும் வருடாந்திரச் சடங்காகவே கருதுகிறார்கள். தூதரகங்களின் அலட்சியத்திற்கிடையே எதிர்காலப் பாதுகாப்பின்றி இளமையையும் திறமையையும் முதலீடாக வைத்து பெரும்பணம் ஈட்டினாலும் எதிர்பாராத நிகழ்வுகளால் வேலையிழந்து தாயகம் திரும்பினால் கவுரப் பிச்சைக்காரர்களின் நிலையிலேயே பெரும்பாலான வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் நிலை உள்ளது.
"பட்ஜெட்ட்டில் சொல்லப்பட்ட தீர்மானங்களுக்கும் அவற்றை நிறைவேற்றுவதற்குமிடையிலான இடைவெளி நிரந்தரமாக இருந்து வருகிறது" என்கிறார் ஐக்கிய அரபு நாட்டில் தொழிலீட்டிவரும் பாரத்பாய் ஷா.
பிரபல கேரளத் தொழிலதிபரும் அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸின் நிர்வாக உறுப்பினருமான யூசுப் அலி M.A. "இவ்வருட பட்ஜெட்டிலும் வழக்கம்போல் NRIக்களின் மறுவாழ்வுக்கானத் திட்டங்களோ அல்லது அவர்களின் முதலீடுகளைக் கவரும் புதிய அம்சங்களோ இல்லை"என்கிறார்.
நிகாய் (NIKAI) குழுமங்களின் தலைவரும் இந்தியத் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் கவுன்ஸிலின் தலைவருமான பரஸ் ஷாதாபுரி "இரண்டரை கோடிக்கும் அதிகமான NRI க்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பங்குகொள்ளும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் சொல்லப்படாதது துரதிஷ்டமானது" என்கிறார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலனுக்கான டிரஸ்டின் (Pravasi Bandhu Welfare Trust) தலைவரும் Barjeel Geojit Securities LLC நிறுவனத் தலைவருமாகிய K.V.சம்சுதீன் "NRIக்களின் மறுவாழ்வுக்கு சிறப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தக் கோரி வருகிறோம். சேமநல நிதியைப் போல கட்டாய நிதியை வெளிநாடுவாழ் இந்தியர் நலனுக்காக உருவாக்கினால் உடல் நலமின்றி அல்லது எதிர்பாராத இழப்புகளால் வெறுங்கையுடன் தாய்நாடு திரும்பும் NRI க்களின் மறுவாழ்வுக்காக உருவாக்கவும் வலியுறுத்தி வருகிறோம். நாட்டிற்கு அந்நியச் செலாவாணி இருப்பாக 262 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ள NRIக்களுக்கான நற்செய்தி எதுவும் இவ்வாண்டு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது" என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் துணைத்தூதர் வேணு ராஜாமணி "டிரில்லியன் டாலர் மதிப்பிலான இவ்வாண்டின் பட்ஜெட் UAE மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டு வாய்ப்புகளுக்கு வழியுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதன் மூலம் 9% வளர்ச்சி சாத்தியப் படவுள்ளதைக் காணலாம்" என்று அரசாங்கத்தின் குரலையே ஒலித்தார்.
பொருளாதார மந்தநிலையால் பல ஆண்டுகள் அனுபவமிருந்த போதிலும் திடீரென வேலையிழந்து நிர்க்கதியாகத் தாய்நாடு திரும்பும் NRIகளின் மறுவாழ்வுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. பல ஆண்டுகள் வெளிநாடுகளில் கழித்து விட்டதால் உள்ளூரிலும் உடனடியாகத் தொழில் தொடங்குமளவுக்குப் போதிய பொருளாதார வசதிகளை அரசுகள் செய்து தருவதில்லை. அரசாங்கம் அறிவிக்கும் பெரும்பாலானச் சலுகைகள் NRIக்களால் பெறமுடியாதது ஒரு பக்கமிருக்க, வங்கிக் கடன்களிலும் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. வங்கிகளில் NRI கணக்கு வாடிக்கையாளர்களாக இருக்கும் வரையில்தான் மரியாதை!
இப்படியாக NRI இந்தியர்களின் சுகதுக்கங்களையும் எதிர் பார்ப்புகளையும் கருத்தில்கொள்ளாமல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பட்ஜெட்டுகளால் NRIக்கள் விரக்தி அதிகரிக்கும் நிலையிலேயே மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. முந்தைய பட்ஜெட்டைப் போன்றே இவ்வாண்டு பிரனாப் முகர்ஜி சமர்ப்பித்த பட்ஜெட்டும் வளைகுடா இந்தியத் தொழிலதிபர்களையும் NRIக்களையும் ஏமாற்றமடைச் செய்துள்ளதைப் பரவலாகக் காணமுடிகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




