எத்தனையோ சூரியகிரகணங்கள் நிகழ்ந்திருந்தாலும் இன்றைய சூரியகிரகணம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது என்றால் மிகையில்லை. சூரியகிரணம் காரணமாக நிலவின் ஈர்ப்பு அதிகரித்து கடல்மட்டம் உயரும் என்பதை மிகைப்படுத்தி பூமியின் மேற்பகுதி தட்டுகள் நகர்ந்து சுனாமி ஏற்படும் என்ற புரளியும் சேர்ந்து கொண்டதே இப்பரபரப்புக்குக் காரணம்.
கிரகணங்களின் பேரால் மக்களிடையேயுள்ள மூட நம்பிக்கைகளை அகற்ற அறிவியலாளர்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். கோளரங்கங்களிலிருந்து விண்ணில் நிகழும் அற்புதத்தைக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. நாத்திகர்களின் கிரகண விருந்து, இசுலாமியர்களின் சூரியகிரகண சிறப்புத் தொழுகை போக பெரும்பாலான இந்துமத ஆலயங்கள் ஐதீகப்படி மூடப் பட்டிருந்தன. இவ்வாறாக அனைத்துத் தரப்பு மக்களையும் தொற்றிக் கொண்ட சூரியகிரகண பரபரப்புகளில், நமது இந்திய விமானப் படையும் கலந்து கொண்டது.
மிராஜ்-2000 ரக போர்விமானம் மற்றும் AN-32 ரக விமானங்களில் விண்ணியற்பியலார் (astrophysicists) சிலருடன் விண்ணில் பறந்து சில ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைப் படம்பிடித்தனர்.
குவாலியரிலிருந்து மிராஜ்-2000 விமானமும் அறிவியல் தொழில் நுட்பக்கழகத்தினருடன் இன்னொரு விமானம் ஆக்ராவிலிருந்து கஜுராஹோவுக்கும் பறந்து விண்ணிலிருந்து பலகோணங்களில் படம்பிடித்தனர். உதய்பூர் மற்றும் பெங்களூருவிலிருந்தும் விண்ணியற்பியலார் கலந்து கொண்டு, தேவையானக் காட்சிகளைப் படம்பிடித்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




