அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அக்கட்சியே எதிர்பாராத அளவு வெற்றி பெற்றது. மேற்கு வங்கம் மற்றும் கேரளா கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்ற மாயை தகர்ந்தது. அவ்விடங்களிலும் காங்கிரஸ் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டது.
வழக்கம் போல் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருந்து, சில தொழிலதிபர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என கனவு கண்ட பாஜகவுக்கு தேர்தல் முடிவு பேரிடியாக விழுந்தது. 2004 தேர்தலில் கிடைத்த வாக்குகள் அப்படியே சிதறாமல் எங்களுக்குக் கிடைத்துள்ளது என்று சமாளித்த பாஜக, கடந்த ஐந்து வருடங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை வகையாக மறைத்துக் கொண்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அரசியல் வித்தகர் தேவகவுடா எனப் பலரும் பிரதமர் கனவில் மதிமயங்கி சுற்றிவந்த வேளையில் பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்களின் கணிப்புகளையும் தவிடு பொடியாக்கிவிட்டு காங்கிரசின் கை ஓங்கியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி ஓரளவு தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைப்பவர்களுக்கு கடிவாளம் போட நினைத்தது. அதிக பட்சமாக 30 - 32 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிடலாம் என்ற கனவுடன் ஜெயலலிதா பட்டும் படாமலும் பேட்டியளித்து வந்தார். விடுதலைச் சிறுத்தைகள் தவிர புலி ஆதரவு அரசியல் கட்சிகள் ஜெயலலிதா பக்கம் ஒதுங்கி நின்று ஓட்டு வேட்டை நடத்தியது. ஈழம் மட்டுமே அதிமுக கூட்டணியின் தேர்தல் மூதலீடாக அமைந்திருந்தது.
இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ரூபாய்க்கு அரிசி என்று கூறி அதை ஒரு ரூபாய்க்கு வழங்கியது, கொசு வலை, மிதிவண்டி என நடுத்தர மக்களைக் கவர்ந்த திமுக கூட்டணி அதிக பட்சமாக 24 முதல் 26 தொகுதிகளையே நம்பியிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் தவிடு பொடியாக்கியது.
தேர்தல் முடிவுகளின் மூலம் தோல்வியை ஒப்புக் கொள்ள முரண்டுபிடித்த கட்சிகள் யாவும் தங்கள் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய முற்படாமல் தேர்தல் ஆணையத்தின் தலையில் சப்பைக்கட்டின. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்றும் அவ்வாறு குளறுபடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க இயலும் என்றும் ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வந்தன. வாக்குப் பதிவு இயந்திரங்களை விடுத்து மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்றும் அறிக்கைகள் வெளியிட்டன.
தோல்வியைத் தழுவிய மிகப்பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி இது சம்பந்தமாக அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை எனினும் தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய அதிமுக, மதிமுக, பாமக, மமக ஆகிய கட்சிகள் மற்றும் தேசிய அளவில் பாஜக வும் இதைப் பகிரங்கமாகக் கூறிவந்தன.
இந்நிலையில் வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்ய இயலும் என்பதை நிரூபிக்க வருமாறு பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து 8 நாட்களாகக் (03-08-2009 முதல் 08-08-2009 வரை) காத்திருந்தது.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துவிட்டோம் என்று ஆங்காங்கே கூறியவர்கள் தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இயந்திரங்களில் தங்கள் கூற்றை நிரூபிக்க இதுவரை முன் வரவில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் மூலமாக கட்டுப்படுத்தப்படும் எந்த ஒரு இயந்திரத்தையும் அதனை இயக்குபவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இயங்கும் விதத்தில் வடிவமைக்க முடியும் என்பது உண்மையே. ஆனால், வாக்கு இயந்திரத்தைப் பொறுத்தவரை அதற்கான சாத்தியங்கள் அனைத்தும் களையப்பட்டு முழு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட மாசற்ற தரம் வாய்ந்த இயந்திரங்கள் என தேர்தல் கமிசன் கூறுகிறது. இதனை ஏற்க மறுத்து வாக்கு இயந்திரத்தின் மீது குற்றம் சுமத்துபவர்கள், தேர்தல் கமிசன் வசமில்லாத தரத்தில் குறைந்த இயந்திரங்களை வைத்து குற்றம் சுமத்துவதைத் தவிர்த்து, தேர்தல் கமிசனிடம் இருக்கும் தரமான வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ய இயலும் என்பதை நிரூபிக்க வேண்டும். அல்லாதவரை தேர்தலில் தோல்வியடையந்த கட்சிகளின் இத்தகைய குற்றச்சாட்டுகள் வெற்று வாய்ஜாலங்களாகவே கருதப்படும்.
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இதுபோன்று அவதூறு கூறுவது சாதாரணமாக நடைபெறும் ஒன்று தான். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்று எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸும் இதே குற்றச்சாட்டைக் கூற வாய்ப்பு உண்டு. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமான இத்தகைய சாட்டை நிரூபிக்க அவகாசம் தந்த பின்னரும், நிரூபிக்காமல் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களாட்சித் தத்துவத்தின் மீது மக்களுக்கு மீதம் இருக்கும் நம்பிக்கையும் தகர்ந்துவிட வாய்ப்பாக இது அமையும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




