மதுவின் தீய விளைவுகள் - குறிப்பாகத் தமிழ் நாட்டில் - கூடிக்கொண்டே வருவதாக அனைத்திந்திய மகளிர் கூட்டமைப்பு (AIWC) தன் கவலையைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் நீலகிரிப் பிரிவுத் தலைவியான திருமதி இந்து கே. மல்லா, மாவட்ட ஆட்சியர் திரு. அனந்தராவ் பட்டேலிடம் ஒரு விண்ணப்பத்தை அளித்தார்.
மதுவினால் தமிழகத்தில் மறுக்க முடியாத தீய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார் திருமதி இந்து.
மதுப் பழக்கத்தால், பொருளாதார இழப்பைத் தவிர, குடும்பங்களின் மனோநிலையும் உடல்நிலையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்விண்ணப்பம் கூறுகின்றது. குறைந்த பட்சம், அரசாங்கம் விதித்துள்ள சட்ட விதிமுறைகளையேனும் மது விற்பனையாளர்கள் கடைப்பிடித்திருந்தால், இந்த அளவு மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்காது என்று அந்த விண்ணப்பம் கூறுகின்றது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வணக்கத்தலங்கள், பொதுமக்களின் குடியிருப்புகள் ஆகியவற்றிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குமேல் மது விற்பனை நிலையங்கள் இருந்திருந்தால், இது போன்ற தீய விளைவுகள் ஏற்பட்டிருக்கா என்பதையும் அவ்விண்ணப்பம் சுட்டிக் காட்டுகின்றது.
பொதுமக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை, சுகாதார அதிகாரிகளின் துணை கொண்டு ஏற்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்றும் இவ்விண்ணப்பம் கூறுகின்றது. "மதுப் பழக்கம் என்பது ஒரு நோய் என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டும்; மதுவிலிருந்து விடுபடப் பயிற்றுவிக்கும் நிலையங்களும் ‘கவுன்சிலிங்’ பிரிவுகளும் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்; இம்முயற்சிகளில், எமது AIWC தனது முழு ஒத்துழைப்பைத் தர எப்போதும் ஆயத்தமாக உள்ளது” என்றும் திருமதி இந்து தன் விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.

| அடுத்தது > |
|---|




