முதன்முறையாக மூலக்கூறு ஒன்றின் அமைப்பு குறித்த வியத்தகு படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மூலக்கூறின் வேதி இணைப்புகளும் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஜுரிக் ஐபிஎம் ஆய்வு மையத்தில் இப்படம் எடுக்கப்பட்டது.
படம் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலக்கூறு பெண்டாசீன் எனப்படும் ஐந்து பென்சீன் அறுகோணங்கள் இணைந்த ஒரு மூலக்கூறாகும். இப்படம் எடுக்க ஆய்வாளர்கள் அணு ஆற்றல் நுண்ணோக்கி (Atomic Force Microscope - AFM) ஒன்றைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர்.
இப்படம் எடுக்க மூலக்கூறு முழுவெற்றிடம் ஒன்றில் மீக்குறைந்த குளிர் வெப்பநிலையில் இருத்தப்பட்டு, அது அணு ஆற்றல் நுண்ணோக்கி மூலம் அதிர வைக்கப்பட்டது. மூலக்கூறு அதிர்வடையும் போது நிகழும் அதிர்வெண் வேறுபாடுகள் படமாகப் பதியவைக்கப்பட்டன.
இப்படம் வியத்தகு வகையில் இயல்புக்கு ஒத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு தனி மூலக்கூறின் படம் இந்த அளவு துல்லியமாக இதுவரை எடுக்கப்படவில்லை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




