இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

லவ் ஜிஹாத் குறித்து விசாரணை - கேரள உயர்நீதி மன்றம்!

E-mail அச்செடுக்க
காதலிப்பதாக நடித்து பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்யும் லவ் ஜிஹாத் மற்றும் ரோமியோ ஜிஹாத் அமைப்பின் செயல்பாடுகளைக் குறித்து விசாரணை நடத்த கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று வாரங்களுக்குள் இதனைக் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க டி.ஐ.ஜி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி கெ.டி. சங்கரன் கட்டளையிட்டுள்ளார். அந்த இயக்கத்தின் நோக்கம், அமைப்பு பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச தரத்திலும் இவ்வியக்கத்திற்குரிய தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டு பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பத்தனம் திட்டை செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதன் பேரிலும் மானபங்கப்படுத்த முயற்சித்ததன் பேரிலும் காவல்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷஹன்ஷா மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவைப் பரிசீலிக்கும் வேளையில், மேற்கண்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. அத்தோடு அவர்களின் முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருப்பூணித் துறை ஹில்பேலஸ் மற்றும் திருவனந்தபுரம் பேரூர்கடை காவல்நிலையங்களில் அப்பெண்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் தகவலறிக்கையைப் பரிசோதனை செய்ததில், இதே போன்ற சம்பவங்கள் கேரள மாநிலத்தின் பல பாகங்களிலும் நடந்துள்ளதாக நீதிமன்றம் கூறியது. மற்ற சமுதாயங்களில் உள்ள பெண்களை இஸ்லாமிய மதத்துக்குக் கட்டாய மதமாற்றம் செய்வதே இவ்வமைப்புகளின் செயல்பாடு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

"முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்த செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இவ்வாறான பெண்களை நேரடியாக சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்" என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.

"மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை.கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்" எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், இவ்வழக்கை இரு வாரத்திற்குப் பின் பரிசீலிப்பதாக கூறி மாற்றி வைத்தது.

"லவ் ஹிஜாத் மற்றும் அதனுடனான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொடர்பு குறித்து" விசாரிக்க நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வரவேற்றுள்ளது. அதே சமயம், நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பாரபட்சமான அணுகுமுறை என சமுதாயத்தின் பல பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. "தீர்ப்பில் ஒரு சமுதாயத்தைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தும்படியிலான வாசகங்களை நீக்குவதற்குரிய சட்ட நடவடிக்கைகளில் அவசரமாக முஸ்லிம் லீக் ஈடுபடும்" என கேரள முஸ்லிம் லீக் பொது செயலாளர் குஞ்ஞாலிகுட்டி கூறியுள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்