இந்தியாவிலுள்ள சில ஊடகங்களைத் தவிர்த்து பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களை மட்டுமே குறி வைத்து தங்களது பத்திரிகை தீவிரவாதத்தை வளர்த்து வருகின்றன. திரைப்படத் துறையில் உள்ள சில தேசப் பக்தி (?) நடிகர்கள், இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதிகளாக சித்தரித்து பொழுது போக்குத் துறையிலும் தவறான சிந்தனைகளை மக்களிடம் வளர்த்து வருகின்றனர்.இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வெளிப்படையாகவே தனது தவறான சிந்தனையை மக்களிடம் விதைத்துள்ளார் நடிகர் கமல். உயர் ஜாதி எனக் கூறிக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் தன்னை நாத்திகனாக அடையாளம் காட்டிக் கொண்ட கமலின் "உன்னை போல் ஒருவன்" படம் குறித்து குமுதம் இதழில் வெளியான பிரபல எழுத்தாளர் ஞாநி அவர்களின் விமர்சனத்தை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா? படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?! நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.
என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.
சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய். மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள்.
அவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.
உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன? இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய்.
அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து தீவிரவாதியான இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்? படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.
அதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.
முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.
நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.
அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.
கடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.
நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------தங்களது தாய் நாட்டை ஆக்கிரமித்துள்ளோரை எதிர்த்துப் போராடும் ஹமாஸ் இயக்கத்தையும் தீவிரவாத பட்டியலில் சேர்த்துள்ள கமல் அவர்களே, தமிழர்களின் சுய உரிமைகளுக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும் உங்களுக்கு போராளிகளோ? கோவை குண்டு வெடிப்பைப் பற்றி படத்தில் காட்டி அந்தச் சதி செயலில் ஈடுபட்டவர்களை எந்த விசாரணையும் இன்றி கொலை செய்யும் உங்களுக்கு மாலேகான் குண்டு வெடிப்பு பற்றி தெரியாதா? தெரிந்தும் வாய் திறக்காது ஏன்? உங்கள் படத்தை ஓட விட மாட்டார்கள் என்ற பயமா?
கமல் அவர்களே இனியாவது திருந்துங்கள். தீவிரவாதிகள் எல்லா மதத்திலும் எல்லா மொழியிலும் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். "இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் அல்ல; ஆனால் தீவிரவாதிகள் அனைவருமே இஸ்லாமியர்கள் தான்" என்றொரு விஷ விதை சமூகத்தில் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் 3000க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களை அரசு இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொடூரமாக கொன்றொழித்த மோடி, ரத்த யாத்திரை நடத்தி நாடு முழுவதும் இரத்தம் ஓட வைத்த அத்வானி, மாலேகான், தென்காசி மற்றும் இன்னும் வெளிவராத அனேக குண்டு வெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது கட்டி வைத்த இந்துத்துவவாதிகள், கண்ணிவெடிகள் மூலம் நாள்தோறும் மக்களைக் கொன்றொழித்து வரும் நக்சல்கள், மாவோயிஸ்டுகள், எண்ணெய், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்காக ஃபலஸ்தீன், ஈராக், ஆப்கான் என இலட்சகணக்கான முஸ்லிம்களைக் கொசுக்களை விட கேவலமாக கொன்றொழிக்கும் ஸியோனிஸ, முதலாளித்துவவாதிகள் என இவர்கள் எல்லோரும் எப்போது இஸ்லாமியர்களாக மாறிப்போனார்கள் என்பது இப்போதும் விடை காண முடியாத கேள்வியாக நின்று கொண்டிருக்க, அதே விஷக் கருத்தைத் தன்னை நடுநிலையான கலைஞன் எனக் கூறிக் கொள்ளும் கமலும் கையில் எடுத்திருப்பது பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது.
கமலிடம் எதிர்பார்ப்பது நடுநிலையை மட்டுமே! தீவிரவாதமும் பயங்கரவாதமும் நிச்சயம் அழிக்கப்பட வேண்டியதே! அதனை அப்பாவிகளின் மீது கட்டி வைத்து பூசி மெழுக நினைத்தால், அது யதார்த்த பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் நல்ல உரமாகவே அமையும். இஸ்லாமிய சமூகத்தை அந்த உரமாக பயன்படுத்திக் கொள்வதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இச்சமுதாயத்தின் எதிர்பர்ப்பாகும். கமல் செய்த தவறைத் திருத்துவாரா?
- அப்துல் ரகுமான்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

எழுதியவர்: unnai pol oruvan, October 18, 2009
[/iat to me it appears that]the point made out in Wednesday as well as onnai pol oruvan was public tolerance can one day be lost abd burst in to flames of anger...in the original movieis more ae wednesday, the lead role was played by nasurudhin who is not a hindu.atleast..but a rational muslim, which is true of quite a few of the muslims as well as hindus..so the message is anmore about the limits of public tolerance than to picture any thing else as allegged in the above article
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




