கடந்த அக்டோபர் 25 ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 4 ரன்களில் இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது. ஒரு கட்டத்தில் 201 ஓட்டங்களுக்கு 7 நபர்களை இழந்து தவித்த இந்திய அணி பின்னர் 8, 9 ஆவது நபராக ஜோடி சேர்ந்த ஹர்பஜன் சிங் மற்றும் பிரவின் குமாரின் சிறப்பான ஆட்டத்தால்
வெற்றி பெறக் கூடிய நிலைக்கு வந்தது. ஆனாலும் இறுதியில் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் தலைவர் டோனியிடம் தோல்வி பற்றி கருத்து கேட்டதற்கு, ''இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை. இதுதான் தோல்விக்குக் காரணம்'' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ சி சி சாம்பியன்ஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியதற்கும் பந்து வீச்சாளர்களையே தோனி குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
அவ்வாறு குற்றம் சாட்டிய போது சக வீரர்களான அமீத் மிஸ்ரா மற்றும் கவுதம் காம்பிர் இந்தக் குற்றசாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அது குறித்து, " ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ் மேன்களான ஹுசே மற்றும் ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது சாதாரண காரியமல்ல. ஐ சி சி சாம்பியன்ஸ் தொடரில் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியைச் சரியாக செய்தனர்'" என்று அமீத் மிஸ்ரா கூறி இருந்தார்.
அது போலவே கவுதம் காம்பிரும் ''சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஏமாற்றத்தில் உள்ளனர். அணியின் தோல்விக்குப் பந்து வீச்சாளர்களை மட்டுமே குறை கூறுவது சரியில்லை. பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்பதே சரியாக இருக்கும். அந்த நாள் இந்தியாவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இல்லை. ஆஸ்திரேலியாவுடனான லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது, போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது'' என்று தெரிவித்து இருந்தார்.
முதலில் பந்து வீசி முடித்து இரண்டாவது பேட்டிங்கிற்கு இறங்கிய பின் ஏற்படும் தோல்விக்குப் பந்து வீச்சாளர்களைக் குறை சொல்வது சரியான அணுகுமுறை அல்ல. மேலும் 1975 முதல் 1995 வரை இருந்த நிலை இப்போது இல்லை. அன்றைய கால கட்டத்தில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
மேற்கு இந்திய தீவுகள் அணி 1994 -1995 ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 1-0 என்று முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவினாலோ டிரா செய்தாலோ 15 வருட சாதனையை மேற்கு இந்திய தீவுகள் அணி அன்று இழக்க வேண்டிய நிலை. பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்த அந்தப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை இழக்காமல் 1-1 என டிரா செய்தது. இரண்டாவது இன்னிங்க்சில் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் தலைவர் வால்ஷும் பெஞ்சமினும் வேகப் பந்து வீச்சில் கலக்கி 114 ரன்களில் இந்திய அணியைச் சுருட்டினர். கேப்டன் வால்ஷ் தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றினார்.
அந்த நிலை இன்று இல்லை. இன்றைய காலகட்டத்தில் 300 ரன்கள் என்பது ஒரு பெரிய விசயமல்ல என்றாகி விட்டது. அன்று முதலில் பேட்டிங் செய்து 225 ரன்கள் அடித்தால் போதும். இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி திணறி விடும். ஆனால் இன்றோ ஆஸ்திரேலியா அடித்த 434 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எளிதாக திருப்பி அடித்து விட்டது. ஒரே இன்னிங்க்சில் 400 ரன்களுக்கு மேல் 6 முறையும், 300 ரன்களுக்கு மேல் எண்ணிலடங்காமலும் அடித்தாகி விட்டது. பேட்ஸ் மேன்களின் ஆதிக்கம் மேலோங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் அதற்கேற்ப வீரர்களைத் தேர்வு செய்து அவர்களின் திறமைகளை வெளிப் படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெற்றி பெற இலக்கு என்ன என்பது தெளிவாக தெரிந்தே களமிறங்கும் நிலையில், அணியினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கு ஏற்றவகையில் திட்டமிடுவது அணித்தலைவரின் பொறுப்பாகும்.
தோல்விக்குப் பிறகு, தோல்விக்குப் பந்து வீச்சாளர்களை மட்டும் குறை கூறி எந்தப் பயனும் இல்லை. அவ்வாறு ஒரு சாராரை மட்டும் அணித் தலைவர் குறை கூறுவதும் சரியான செயல்பாடல்ல. அது அணியில் ஆட்டக்காரர்களிடையே மன வருத்தத்தையே ஏற்படுத்தும்.
ஹர்பஜன் சிங் வெளிப்படுத்திய திறமையில் 100 ல் ஒரு பங்கை இறுதி நிலை ஆட்டக்காரர்கள் வெளிப்படுத்தியிருந்தாலே மிக எளிதாக வென்றிருக்க முடியும்.
இறுதி நிலை ஆட்டக்காரர்கள் இக்கட்டான சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கும் பவுலர்கள் தங்கள் பங்காக குறைந்தது 10 ரன்களாவது குறைந்த பந்தில் எடுக்கும் வகையில் அவர்களைத் தயாராக்க வேண்டியதும் மிக அவசியம். இந்த விஷயத்தில் தென் ஆப்பிரிக்க அணி மற்றும் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா பாடம் படிக்கலாம்.
ஒரு அணியின் தலைவர் என்பவர், முதல் விஷயமாக அணியினைக் கட்டுக்கோப்பாக, அணி விரும்பும் தலைவராக கொண்டு செல்வதே பிரதானமாகும். அந்த வகையில் அணியிலுள்ள சக வீரர்களில் குறிப்பிட்டவர்களை மட்டும் குறை சொல்வதை, அதுவும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் குறை சொல்வதை விடுத்து, தோல்வியில் கிடைத்தப் பாடத்தின் மூலம் அணியில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய முயற்சி செய்வதே நல்லது. அதுவே ஆரோக்கியமான செயல்பாடுமாகும்.
இனி வரும் எஞ்சிய ஆட்டங்களில் இந்திய அணி தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு விளையாடி தொடரை வென்றால் ஐ சி சி தர வரிசையில் முதலிடம் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இந்திய அணி வெல்லும் என எதிர்பார்ப்போம்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




