இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

என்ன ஆயிற்று பாஜகவிற்கு?

E-mail அச்செடுக்க
தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சாதாரணம். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும், வெற்றியைக் கொண்டு மிதந்து விடாமலும், "என் கடமை மக்கள் பணி செய்து கிடப்பதே" என்பதுதான் நல்ல அரசியல் கட்சிக்கு அழகு. ஆனால் பாஜகவில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் தேசியக் கட்சியாக இருந்த கட்சி, தற்போது மாநிலக் கட்சியாக மாறிவருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

6 மாதங்களுக்குமுன் நடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வியிலிருந்து பாஜக இன்னும் மீண்டது போல் தெரியவில்லை. அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பாஜகவின் ஒழுங்கீனத்தை வெளிக்கொணர்ந்தது. ஜின்னாவைப் புகழ்ந்த அத்வானிக்கு ஒரு நியாயம்; அதே ஜின்னாவைப் புகழ்ந்த ஜஸ்வந்த் சிங்கிற்கு ஒரு நியாயம். "தோல்விக்குப் பொறுப்பேற்று மாநிலக் கட்சித் தலைவர்கள் மட்டும் பதவி விலக வேண்டும்; தேசியத் தலைவர்கள் விலக மாட்டார்கள்" என்பதில் பாரபட்சம் என உட்கட்சிப் பூசல்களால் இதுவரைக் கட்டிக் காத்த கட்சியின் இமேஜிற்கு பலத்த அடி.

அத்வானியை, "இரும்பு மனிதர்" என்றும், "தீர்க்கமான முடிவு எடுப்பவர்" என்றும் முன்னிறுத்தியது பழங்கதையாகி விட்டது. நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விமர்சனம், அதற்கு அத்வானியின் கருத்து என அவர் அடித்த அந்தர் பல்டிகள் நாட்டையே உலுக்கின என்றால் மிகையாகாது. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் அத்வானியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இனி அது நடக்குமா என்பது கேள்விக்குறியே.

இவற்றில் இருந்து மீண்டு வருவதற்குள், மகாராஷ்டிர, ஹரியாணா மற்றும் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் பலத்த அடி. அதனைத் தொடர்ந்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் சர்ச்சைக்குரிய கண்டனம் எனத் தொடரும் வேளையில், கர்நாடகாவில் உட்கட்சிப் பூசல்களால் ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியிருப்பது கட்சித் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டது!

கட்சிக்கு வலுவூட்டுவதற்காக அத்வானி அவ்வப்போது தூசிதட்டி எடுக்கும் யாத்திரைகளுக்குப் போதிய வரவேற்பு இருக்காது என்பது தெளிவாகி விட்டதால் இனி அதுபோன்ற யாத்திரைகளும் செல்ல முடியாத நிலை.

ராமர் பெயரைச் சொல்லியே மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆட்சி செய்த பாஜக, தேர்தலுக்கு மட்டும் ராமர் பெயரைச் சொல்லும் அவலத்தை அடுத்து கட்சியை சாமியார்களின் மத்தியிலும் செல்வாக்கு இழக்க வைத்திருக்கிறது.

காங்கிரஸிற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி இருமுறை ஆட்சியிலும் அமர்ந்த பாஜக தற்போது திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தேசிய அளவில் வாஜபாய் போன்று மிதவாதிகளாக அறியப்பட்ட தலைவர்கள் இல்லாததும் இருக்கின்ற ஓரிருவர் செல்வாக்கின்றி இருப்பதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய குறை. தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த தேர்தலைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையற்று தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்து என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு பாஜகவில் யாருமே வாய் திறக்கவில்லை; ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யுமாம். செய்யட்டும்!
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்