புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் தந்தையை இழந்த அனாதைக் சிறுவர்களுக்கான கல்வி நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குவைட் நாட்டு தனவந்தர்களினால் சுமார் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு மேர்சி கல்வி வளாகம் எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் சுமார் 720 மாணவர்கள் தங்கி இருந்து கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இக்கல்வி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம், கணினி ஆய்வு கூடம், தொழிற்பயிற்சி நிலையங்கள், வகுப்பறைக் கட்டிடங்கள், பள்ளிவாசல், விடுதிகள், வாசிகசாலை, உணவகம், விளையாட்டு மைதானம், ஆசிரியர்களுக்கான விடுதிகள் அலுவலகம், வைத்தியசாலை என்பன மிக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. பாரிய கட்டிடங்கள் சகிதம் கம்பீரமாய் காட்சியளிக்கும் மேர்சி கல்வி வளாகம் இப்பிரதேசத்தின் தந்தையை இழந்த சிறார்களுக்கு ஒரு சிறந்த கல்வியை வழங்கும் நிலையமாகவும், அவர்களுக்கான தொழில்பயிற்சிகளை வழங்கும் நிலையமாகவும் அமைந்துள்ளது. அத்துடன் வசதிகளின்றி வாழும் இந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் உள்ளது.
இந்நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான குவைட் நாட்டுத் தூதுவர் யாகூப் யூசுப் அல் அதீகி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக்கல்வி வளாகத்தைத் திறந்து வைத்தார். அத்துடன் குவைட் நாட்டுப் பிரதிநிதிகள், மேர்சி நிறுவன பிரதிநிதிகள், இலங்கை அரசின் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன், கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ், பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




