புதுதில்லி: 2004-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் முடிய 517 வருவாய்க்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ பதிவு செய்திருப்பதாக மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் திரு பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது.
"ஊழலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது. ஊழலை ஒழிக்கவும். அரசாங்கத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் 2005-ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் விடுதல் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தால் ஒருங்கிணைந்த விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அரசு நடைமுறைகளையும் திட்டங்களையும் எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் கணினி வழி ஆளுமை முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது"
இவ்வாறு அமைச்சர் திரு பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.

| < முந்தையது |
|---|




