இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (02-12-2009)

E-mail அச்செடுக்க

 

 

 

17 ஆண்டுகள் விசாரணை செய்து பொதுமக்களுக்களுக்குத் தெரியாத / ஊடகங்களில் வெளிவராத ஏதேனும் ஒன்றை லிபரன் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக நினைக்கிறீர்களா? - அப்துல் கரீம்

வெளிவராத உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக லிபரான் கமிஷன் நியமிக்கப்பட்டதாக நீங்களே முடிவு செய்துகொண்டீர்களா? ஊடகங்கள் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி மக்களுக்கு அறிவித்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன்.
"நடந்தது என்ன?", "நிஜம்", "குற்றமும் பின்னணியும்" என்று தமிழ்த் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சி நடத்துவதைப்போலவே இதுவும்.

சர்க்காரியா கமிஷன், கிருஷ்ணா கமிஷன் என்ற பெயர்களையெல்லாம் எங்கோ கேட்டது போலிருக்கிறதா?





'தம்' அடித்தால் தான் மூளையே வேலை செய்கிறது என்பவர்களைப் பற்றி வணங்காமுடியார் கருத்து? - அழகன்

"தம்"மைத் தாமே ஏமாற்றிக் "கொல்"பவர்கள்.


பெரும் விஞ்ஞானிகளும் புதியவற்றைக் கண்டுபிடித்தவர்களும் மூளை வேலை செய்யாமலா கண்டுபிடித்தனர்.?

மேடம்க்யூரி, ஹெலன்கெல்லர் போன்றோர் "தம்" பார்டிகளல்லரே?




வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது எதைக் காட்டுகிறது? - சுரேஷ்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிநாடு பீஜேபி தலைவரின் 'டெபாஸிட்' பறிபோனதை அக்கட்சி அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா?





ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஜீன்ஸ்,டிசர்ட் அணிவதுபோல் ஆண்களும் பாவாடை,தாவனி, சேலை அணிவதில்லையே ஏன்? - வல்லம் நாராயணன்

எப்போதும் ஆண் MALE தான். தன் நிலையில் இருந்து கீழிறங்க மாட்டான்.

ஆண்களின் உடைகளைப் பெண்கள் அணிந்தால் கோபித்துக் கொள்ளவும் மாட்டான்.




மனிதன் எப்போது மாமனிதனாகிறான்? - அருணாச்சலாம்

மனிதனாக ஆகும்போது!

புரியவில்லையா?

மனிதனாகத் தோற்றம் காட்டினால் போதாது. மனிதனின் பண்புகள் முழுமையாக நிறைந்திருக்க வேண்டும். அவனே மாமனிதன்.

சான்றுக்கு...

பயனிலசொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்.




அரசியலுக்கு வரும் நடிகர்களைப்போல் அரசியல்வாதிகள் சினிமாவுக்கு வருவதில்லையே ஏன்? - ஆனந்தி

அண்ணாதுரை, கருணாநிதி, முரசொலி மாறன் போன்ற அரசியல்வாதிகள் சினிமாவில் வரலாறு படைத்தவர்கள்.


உங்கள் வினா "அரசியலுக்கு வரும் நடிகர்களைப்போல் அரசியல்வாதிகள் சினிமாவுக்கு நடிக்க வருவதில்லையே " என இருந்திருக்க வேண்டும்.


வந்திருக்கிறார்கள்... திருநாவுக்கரசர், திருமாவளாவன் போல....


ஆனால் நிலைத்ததில்லை.


அரசியலே பெரும் நடிப்பு என்றான பின் சினிமா நடிப்பு இவர்களுக்குத் தூசியாகத் தெரிவதால் அரசியல்வாதிகள் நடிக்க வருவதில்லை.





சிங்காரச் சென்னையை துணை முதல்வர் எப்போது காட்டுவார்? - பெ.பெரியசாமி

முதல்வராகும்போது...........




தொழிலில் முன்னேறுவதற்கான எளிய வழிமுறைகள் என்ன? - அசோக்

வெரி ஸிம்பில்!

உண்மை, நேர்மை. உழைப்பு, இன்னும் உழைப்பு, மேலும் உழைப்பு.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.




கால்குலேட்டர் மனக் கணக்கிடும் திறமையைக் குறைத்ததுபோல் இண்டர்நெட்டால் ஏதேனும் பாதகம் உண்டா? - ஜான்சி

இல்லை!

கால்குலேட்டரால் கணக்கிடும் வேகம் அதிகரித்துள்ளதுபோல் இண்டர்நெட்டால் தொடர்புகொள்ளும் வேகமும் அதிகரித்துள்ளது; உலகம் விரல் நுணியில் வந்துவிட்டது!





முட்டாளுக்குப் பெண்பால் என்ன? - சந்தியா

பெரும்பாலும், பெண்களே ஆண்களை முட்டாள் ஆக்குவதால் இந்த வினா வலுவிழந்ததாகும்.

"முட்டாள்' என்பது பால் அற்ற சொல்-- "கடவுள்" என்பதைப்போல!

ஆண்டாக்டர், பெண்டாக்டர் என்பதுபோல ஆண்முட்டாள்/ பெண்முட்டாள் எனச் சொல்லலாம்.!




லேடீஸ் பேண்ட் / ஜீன்ஸுக்கு ஜிப் வைத்திருப்பது ஏன்? தயவு செய்து ஆபாசமில்லாமல் பதிலளிக்கவும். - காதர் பாட்சா

வல்லம் நாராயணுக்கு அளித்துள்ள விடையைப் பாருங்கள்.

ஆண்களின் உடை ஆண்களுக்குரியதைப்போல்தான் இருக்கும்.

"தயவு செய்து ஆபாசமில்லாமல் பதிலளிக்கவும்" என்று சொல்லி இருப்பதிலிருந்து அதை எதிர்பார்ப்பதுபோல் தெரிகிறது.

எமது தளத்தில் அல்லது வணங்காமுடி பதில்களில் எப்போது ஆபாசத்தைப் பார்த்தீர்கள்?

இந்நேரம் தளம் பண்பாடு மேம்பட்ட, நாகரிகம் மிக்கவர்களால் நடத்தப்படும் தளமாகும்.

வினாவுக்கு விடையளிக்கும் நானும் அவ்வாறே.

எமது தளத்திற்கெனச் சில நெறிமுறைகளும் சட்டதிட்டங்களும் உள்ளன.

மூன்றாம்தரப் பொழுதுபோக்குப் பத்திரிகையில் கேட்பது போன்ற தரமற்ற வினாக்களை நாங்கள் அனுமதிப்பதில்லை.

இந்த விளக்கத்தை வாசகர்களுக்கு அறிவிப்பதற்காகவே உங்கள் வினா இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்