2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து பதவியைப் பெற்றுக் கொண்ட மஹிந்த இன்று விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றார். எவ்வளவு பணத்தைச் செலவு செய்து என்ன விளையாட்டுப் போட்டாலும் நாம் தயங்கப் போவதில்லை. வரும் தேர்தலில் ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி வைப்போம். சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறினார்.நேற்று சிலாபத்தில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய ரணில்,
இன்று இந்நாட்டில் ராஜபக்ஷ குடும்ப ஆட்சி நிலவுகிறது. மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அரசில் ஊழல் மோசடிகள் மலிந்து விட்டன. விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணத்தின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. நான் மஹிந்தவுக்கு சவால் விட்டேன் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம் மற்றும் தங்கங்களின் விபரங்களை வெளியிடுமாறு. ஆனால் இதுவரை அதுபற்றி எந்த பதிலும் இல்லை.
வரும் தேர்தலில் எமது பொது வேட்பாளர் சரத் பொன்சேகா நிச்சயம் வெற்றி பெறுவார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வருகையால் அரசு தடுமாறிப் போயுள்ளது. யுத்த காலத்தில் தேசிய வீரராக தெரிந்த சரத் பொன்சேகா இன்று ஒரு தேசத் துரோகியாக அரசால் நோக்கப்படுகின்றார். என்ன நியாயம் இது? இந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாள் ஜனவரி 26ல் ஆரம்பமாகின்றது. எமது பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்று நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் மாற்றங்களை நாம் கொண்டு வருவோம் என்றார்.
முன்னர் மாதம்பையில் இயங்கி வந்த கட்சியின் அலுவலகம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் தீவைத்து நாசம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலாகவே இந்த அலுவலகம் நிர்மானிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.


| < முந்தையது | அடுத்தது > |
|---|




