
பூனை நாய் போன்ற விலங்கினங்கள் நம்மைப் பார்க்கும்போது நமது கண்களையே உற்று நோக்குகின்றதே. ஏன்? - ஜோதி

அவை உங்களை எதிரியாகப் பார்ப்பதால். இவனை நம்பலாமா அல்லது தாக்கலாமா என முடிவுசெய்வதற்காகவே கண்களைப் பார்க்கின்றன.
வளர்ப்பு நாய், பூனைகள் தம் எஜமானனின் கண்களைப் பார்ப்பதற்கும் புதியவர்களின் கண்களைப் பார்ப்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு.
பூனை நம் கண்களைப் பார்த்தோ பாராமலோ வாலை மேலே உயர்த்தி ஆட்டி, நாக்கை நீட்டி உதட்டைத் தடவினால் உங்களை நேசத்துடன் நெருங்குகிறது எனப் பொருள்.
அதே பூனை உங்கள் கண்களை நேராகப் பார்த்து, வாலைக் கீழே தாழ்த்தி ஆட்டி, மெல்ல் "உர்ர்"ரென்றால் உங்களை எதிரியாகப் பார்க்கிறது; தாக்கத் தயாராகிறது எனப்பொருள்.

நேர் மாறாக, நாய் கண்களைப் பார்த்து,வாலை உயர்த்திக் காதுகளை விடைத்தால் உங்கள் மீது கோபம் கொள்கிறது எனப் பொருள்.
அதே நாய், வாலைக் கீழே தாழ்த்தி ஆட்டினால் அன்பு காட்டுகிறது எனப்பொருள்.
இதனால்தான் "பூனையும் நாயும்போல" எனச் சொலவடை சொல்வார்கள்.
நேர் மாறான தன்மை என்பதால்.
காலில் நகம் நீண்டிருக்கும் விலங்குகள் இவ்வண்ணம் செய்யலாம். எனில் குளம்புள்ள விலங்குகள் இவ்வண்ணம் செய்யா என நினைக்கிறேன்.
ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளதாகக் கூறும் வணங்காமுடியாரே! உங்களுக்கு நாத்திகத்தில் ஏதேனும் நஷ்டம் விளைந்துள்ளதா? - சுந்தர்
வணங்காமுடி நாத்திகன் என நீங்களாகவே முடிவு செய்துகொண்டால் எப்படி?நாத்திகன் நல்லவனாக, சமூக அக்கறையுள்ளவனாக, பிறர் துயரில் உதவும் பண்பாளனாக இருக்கலாம்.
ஆத்திகன் இவற்றிற்கு நேரெதிராகவும் இருக்கலாம்.
எனவே ஆத்திக நாத்திகத்தில் லாப நட்டக் கணக்குப் பார்க்க வேண்டாம்.
மனிதனாக வாழ்வதே சமூகத்திற்கு நல்லது.
வணங்காமுடியின் ஆன்மீகம் மனிதம் நிறைந்தது.
கலைஞரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா? - ஆலந்தூர் பூபதி
அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பது அரிதிலும் அரிதாய் நிகழ்வதாம்.
வி.பி. சிங் போல... வாஜபாயி போல... ஜோதிபாஸு போல... தமிழ் நாட்டில் இரா.செழியன் போல மிகச் சிலரே ஓய்வெடுப்பதுண்டு.
கருணாநிதி ஓய்வெடுப்பார் என வணங்காமுடி நம்பவில்லை.
ஏனெனில்,
புதிய சட்டமன்றக் கட்டிடம் திறக்க வேண்டும்...
அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்க வேண்டும்...
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த வேண்டும் ....
எனக் காரணங்களை சொல்வதால் இப்போதைக்கு ஓய்வில்லை என்பதே பொருள்.
அதனால் ஜெயலலிதா பற்றிய வினாவுக்கு இங்கே வலுவில்லை!
முன்னொரு காலத்தில் "அரசியலில் இருந்து விலக" முடிவு செய்திருந்த ஜெயலலிதாவை மீண்டும் வீறுகொண்டு தீவிர அரசியலில் ஈடுபடச் செய்தது, அன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான்.
உங்களுக்கு ஓர் உன்மை தெரியுமா?
அரசியல் வாதிகள் எல்லாருமே பழுத்த பழங்களாய் இருப்பதற்குக் காரணம் அவர்களது மூளை எப்போதுமே சுறுசுறுப்பாய் இருப்பதுகான்.
யாரைக் கவிழ்க்கலாம், ஆட்சியை எப்படிப் பிடிக்கலாம், பிடித்துவிட்ட நாற்காலியை எப்படித் தக்க வைக்கலாம் என எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருப்பதால் எண்பதுகள் தாண்டியும் அவர்களால் களத்தில் இயங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.
சான்றுக்கு:--
கேரளத்தின் கருணாகரனுக்கு வயது 93
முதல்வர் அச்சுதானந்தனுக்கு வயது 86
நம் முதல்வர் கருணாநிதில்க்கும் சற்றொப்ப அஃதே!
அன்பழகன் கருணாநிதியை விட மூத்தவர்.
ஜோதிபாஸு, வாஜபாயி, ஆட்வானி எனப் பட்டியலிட்டுப் பாருங்கள்.
மாறாக ஒரு அலுவலகத்தில் அதிகாரியாகவோ ஊழியராகவோ பணிபுரிந்தவர், பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் திணறி விடுவார்.
அவர்களில் பெரும்பாலோர் இதய நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டு விரைவில் பரலோகப் பதவி அடைவதை நாம் பார்க்கிறோம்/ கேள்விப்படுகிறோம்.
காரணம்,
அவர்கள், "அன்றாடச் செயல் பாடுகள் வரையறுக்கப்பட்ட ஒரு வட்டத்துக்குள்" வாழ்ந்து பழகியவர்கள். திடீரென ஓய்வு வந்துவிட்டால் திணறிப் போவார்கள்.
ஆனால் அரசியல்வாதிக்குத் தினம் தினம் ஆயிரம் பிரச்சனை, கூட்டணி மாற்றம், உட்கட்சிப் பூசல், எதிர்க்கட்சித் தாக்குதல், அதற்கு எதிர்த் தாக்குதல், தேர்தல், இடைத் தேர்தல், கட்சித் தேர்தல், மாநாடு, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என எப்பொழுதுமே சுறுசுறுப்பு.
இண்டெர்நெட், தொலைக்காட்சி சீரியல் எதிலிருந்து மீள்வது கடினம்? - சரோஜா
இண்டெர்நெட், தொலைக்காட்சி சீரியல் இரண்டில் எதிலிருந்து மீள்வது கடினம் எனக் கேட்க நினைத்துள்ளீர்கள்.
அறிவையும் புதுமையையும் தேடுவோர் இணையத்தில் இருந்து மீள்வது கடினம்.
பொழுதுபோக்கையும் பிறர் குடும்பக் கதையையும் விரும்புவோர் சீரியலில் இருந்து மீள்வது கடினம்.
சிங்கள ராணுவத்தால் கொல்லப்படும் மீனவர்கள் தற்காப்புக்கு ஆயுதம் வைத்துக் கொள்ளலாமே? - மணிமாறன்
நிராயுதபாணிகளான மீனவர்களைக் கொல்வோருக்கு, மீனவர்களிடம் ஆயுதம் இருப்பது அவர்களைக் கொல்லத் தக்க காரணமாகிவிடுமே.?அது, குதிரை கிழே தள்ளிக் குழியும் பறித்த கதையாகிவிடும்.
இந்திய மீனவர்களைக் காப்பது இந்திய அரசின் கடமை. நம் கடற்படையின் உதவியும் பாதுகாப்பும் மீனவர்களுக்கு உறுதிப் படுத்தப்பட வேண்டும்.
செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் முகத்தைப் பார்த்தால் அப்பாவி மாதிரியல்லவா தெரிகிறது? - வடிவேல்
அப்"பாவி"தானே...
பன்றிக்காய்ச்சலுக்கு மருத்து உற்பத்தி செய்ய ஏன் இத்தனை தாமதம்? - சபேஸ்வரன்
வந்திருப்பது எவ்வகை நோய் எனக் கண்டுபிடிப்பதற்கே காலமாயிற்று.
அதனால் மருந்து கண்டுபிடிப்பும் தாமதமாக நேர்ந்திருக்கலாம்.
லேடீஸ் பேண்டுக்கு ஜிப் ஏன் என்ற கேள்விக்கு சூடானதற்குக் காரணம் பதில் சொல்ல முடியவில்லையே என்ற எரிச்சல் தானே? - காதர் பாட்சா, வழுத்தூர்
இந்நேரம் தளத்தின் வசகர்கள் 'கூரறிவு' கொண்டவர்கள் என்ற என் நம்பிக்கைக்கு ஓர் அரைப்புள்ளி இட்டுவிட்ட வழுத்தூர் கதர்பாட்சாவே ...
சென்றவரம் வெளியான உமது வினா இரு பகுதிகளைக் கொண்டது.
முதற்பகுதி..
லேடீஸ் பேண்ட் / ஜீன்ஸுக்கு ஜிப் வைத்திருப்பது ஏன்?
அதற்குரிய விடையாக, " வல்லம் நாராயணுக்கு அளித்துள்ள விடையைப் பாருங்கள்.
ஆண்களின் உடை ஆண்களுக்குரியதைப்போல்தான் இருக்கும்" எனச் சொல்லியிருந்தேன்.
கோடு கிழித்தால் கோட்டை வரை செல்வர் கூரறிவுடையோர்!
நீர் அந்தப் பட்டியலில் இல்லை என்பதை உமது இவ்வார வினா வெளிப்படுத்துகிறது.
சென்றவார வினாவின் இரண்டம் பகுதி , "தயவு செய்து ஆபாசமில்லாமல் பதிலளிக்கவும் " என்று வினவியதற்குரிய விடையை முழுமையாக விளங்கிக் கொள்ளும் ஆற்றலின்றி எரிச்சல் பட்டுள்ளீர்.
எதிர்பார்த்த ஆபாச விடை கிடைக்காததால் காதர்பாட்சா சூடானதால்தானே இந்த வினா?
பாட்சாவின் பாச்சா பலிக்காது
குமுதம் 02/12/09 இதழில், "நெஞ்சைத் தொட்டுச் சொல்லும், அசின், த்ரிஷா, நயன் தாரா, தமன்னா, நமீதா இவர்களில் உமக்குப் பிடித்தது நமீதா தானே" என்ற கேள்விக்கு,
"சீய். நெஞ்சைத் தொட்டுச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்" என்று அரசு பதில் அளித்திருப்பதைப் பற்ரி வணங்காமுடியின் கருத்து என்ன? - பண்டாரம்
கடந்த வாரம், வழுத்தூர் காதர்பாட்சா எனும் வாசகருக்கு அளித்த பதிலைப் பாருங்கள்.
அந்தப்புரத்தில் பலபெண்களுடன் உறவு கொண்ட பண்டைய மன்னர்கள் யாரையும் எயிட்ஸ் தாக்கவில்லையே? - கந்தன்
பல பெண்களுடன் உறவு கொள்வதால் எயிட்ஸ் நோய் வரும் என யார் சொன்னது?
எயிட்ஸ் நோய் வருவதற்கான பல காரணங்களுள் பலருடன் பாதுகாப்பற்ற உடல் தொடர்பு கொள்ளுவதும் ஒன்று.
அந்தப்புரம் என்பது அரசிகளின் தனி இடமாகும்.
அங்கு அரசனுக்கு மட்டுமே அனுமதி.
அங்கு பணிப்பெண்களாகவும் அரசனை மகிழ்விக்கும் ஆடல் பெண்களாகவும் பலர் இருந்திருக்கலாம்.
அந்தப் புரத்தில் அரசன் பல பெண்களுடன் உறவு கொண்டான் என்பது மிகைப்படுத்தப் பட்ட கற்பனை.
வணங்காமுடி எந்த பிராண்ட் ஷாம்பூ உபயோகிக்கிறார்? - வேலுப்பிள்ளை
நீங்கள் எமது தளத்திற்குப் புதிய வாசகர் என்று தெரிகிறது.
முன்னரே "வணங்காமுடி"க்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
முடி எனக் கண்டதால் "தலைமுடி" எனத் தவறாக விளங்கிக் கொண்டு, வினவியுள்ளீர்கள்.
உங்களின் வினாவைக் கருத்தில் கொண்டு விடை...
"வணங்காமுடி"யின் தலை முடியில் பொடுகு இல்லை, பேன் இல்லை, காற்றில் அலைபாயவிட்டு நடக்கும் பாலினமுமில்லை.
எனவே நீங்கள் சொன்ன ஆடம்பரப்பொருள் வணங்காமுடிக்குத் தேவையில்லை.
மதத்தை தீவிரமாக பின்பற்றினால், ஏன் தீவிரவாதி என்கிறார்கள்? அப்படியென்றால் உலகில் அனைத்து மக்களும் தீவிரமாக பின்பற்றவில்லையா? - மன்சூர், ஜெத்தா
எந்தச் செயலிலும் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை, அதில் தீவிரம் காட்டுவதாகச் சொல்வர்.
சான்றுக்குத் தீவிரத் தேடுதல் வேட்டை, தீவிரப் பிரச்சாரம், தீவிர சிந்தனை....
ஆனால் இப்போது கூறப்படும் "தீவிரவாதி" என்பது 'எக்ஸ்ட்ரீமிஸ்ட்' எனும் ஆங்கிலச் சொல்லின் ஊடக மொழியாக்கம்.
இது சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் செயல்பாடுகளும் உள்ளவர்களைக் குறிப்பதன்று.
உங்கள் கூற்று சரியெனில், மாவோயிஸ்டுகளையும் உல்பாவினரையும் "தீவிரவாதிகள் "என்று அழைப்பது தவறாகிவிடும்.ஏனெனில் அவர்கள் சமயஞ்சார்ந்து இயங்கவில்லை

புவேனஸ்வரி ஜெயலலிதா ஒற்றுமை கூறவும். - தாஜ் ராஃபி
யார் புவனேஸ்வரி?
ஜெயலலிதாவை, மேரிமாதாவாக, அம்மனாக அவரது தொண்டர்கள் சித்திரிப்பது வழக்கம்தானே?
புவனேஸ்வரியும் ஓர் அம்மன் என்பதால் இந்த வினாவோ?
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




