இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (16-12-2009)

E-mail அச்செடுக்க

 

 

 

குடுகுடுப்பைக்காரர்கள் பெரும்பாலும் கோர்ட் அணிந்திருப்பது ஏன்? - கிருஷ்ணா

அவர்கள் "கோட்" மட்டும் அணிவதில்லை; தலையில் வண்ணத்துணியால் பெரிய தலைப்பாகையும் கட்டி இருப்பர். கோட் ஒட்டுப்போட்டதாய் இருக்கும்.

குடுகுடுப்பாண்டி மட்டுமின்றி, பெரும்பான்மை பூம்பூம் மாட்டுக்காரர்களும் அவ்வாறே ஒட்டுப்போட்ட கோட்டு அணிந்திருப்பர்.

பிறரைக் கவருவதற்காக இப்படி அணிவது வழக்கமே!

மந்திரவாதி காவி உடையுடன் ஜடாமுடிக் கோலத்தில் தோற்றமளிப்பது, மேஜிக் காட்டுபவர் நீண்ட கோட்டுடன் தலையில் குல்லாய் அணிந்து வருவது போன்றவை இவ்வகையில் அடங்கும். THE WITCH AND THE BITCH DRESS TO ATTRACT OTHERS என்ற ஆங்கிலச் சொல்வடை கேள்விப்பட்டதில்லையா?




ஆளுங்கட்சியிலும் இல்லாமல் எதிர்க்கட்சியிலும் இல்லாமல் சுப்பிரமணிய சுவாமி எப்படி அரசியல் நடத்துகிறார்? - முருகேஸ்


சுயேட்சையாக!



ஸ்டாலினை டெல்லிக்கு அனுப்பி விட்டு அழகிரியை தமிழகத்திலேயே வைத்துக் கொண்டால் பிரச்சினை தீருமா? - லதா

அவர்கள் தற்போது இருக்கும் இடங்களிலேயே இருப்பதால் யாருக்குப் பிரச்சனை?

எதிர்கட்சிகளுக்கா அல்லது ஆளும் கட்சிகளுக்கா? (காங்+திமுக)?

நாட்டுக்கு ஏதும் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.




திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்குக் காரணமான அனிதா ராதாகிருஷ்ணன் எதிரணிக்குச் சென்று மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது ஜனநாயகத்தைக் கேலி செய்வதுதானே? - ஏழுமலை


அது மட்டுமன்று!


சென்ற தேர்தலில் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களையும் அவமானப் படுத்துவதாகும்.

அரசியல்வாதிகள் எந்த முகத்துடன் போய் மக்களைச் சந்திக்கின்றனரோ தெரியவில்லை.

வெட்கங்கெட்டவர்கள்.


இடைத்தேர்தலுக்குக் காரணமானவரை மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட அனுமதிப்பதால் அரசுக்கு இரட்டைச் செலவு. இடைத்தேர்தல் செலவைக் காரணமானவர்களே ஏற்க வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்தால் என்ன? - வடிவரசன்


நல்ல யோசனை. ஆனால் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டியவர்களே அரசியல்வாதிகள்தாமே? நடக்குமா?




சென்னையை தலைமையமாக கொன்டு தமிழ் நாடு 1, திருச்சியை தலைமையமாக கொன்டு தமிழ் நாடு 2 என்று பிரித்தால் லாபமா, நஷ்டமா? - தாஜ் ரஃபி


யாருக்கு?

சிறிய அளவில் மாநிலங்களோ மாவட்டங்களோ இருந்தால் நிர்வாகம் செய்வது எளிதாக இருக்கும்.

உங்கள் ஐடியாவைச் செயல் படுத்தும்போது கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளத்துக்குக் கொடுத்துவிட்டு, அங்குள்ள இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் சேர்த்தால் முல்லைப்பெரியாறு அணையும் நமக்குக் கிடைத்துவிடும். குமரி மக்கள் மாநிலத் தலைநகருக்கு அருகிலும் இருப்பர்.




நீலப்படம், மஞ்சள் பத்திரிக்கை, சிகப்பு விளக்கு, பச்சையாகப் பேசுதல் - செக்ஸுக்கும் நிறங்களுக்கும் என்ன தொடர்பு? - சவுந்தர் ராஜன்


ச்சை என்பது அப்படியே எவ்விதப் பூச்சும் இல்லாததைக் குறிக்கும்.


நாகரீகப் பூச்சோ பண்பாட்டுக் கவசமோ இன்றிப் பேசும் பேச்சுகள் பச்சையான பேச்சுகளாகும்.

ஆபாசப் பேச்சையும் அப்படிக் குறிப்பதால், நீங்கள் அதையும் செக்ஸையும் தொடர்புபடுத்தி விட்டீர்கள்.
பாரபட்சமான / அவதூறான செய்திகளை உண்மைபோல் எழுதும் பத்திரிகைகளை "மஞ்சள் பத்திரிகை" என்பர்.

விற்பனை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, மனக்கிளர்ச்சியைத் தூண்டும் வண்ணம் உண்மையைத் திரித்துக் கூறும் கதைகள் நிறைந்தது மஞ்சள் பத்திரிககை.


தமிழில் கூட ஒரு நாளிதழையும் ஒரு வார இதழையும் "மஞ்சள் பத்திரிகை" எனச் சிலர் - குறிப்பாக அரசியல்வாதிகள் - சாடுவதுண்டு.

வெறும் ஆபாச/ காமச் செய்திகள் மட்டுமே "மஞ்சள்' என நீங்கள் நினைக்கக் காரணம், அது மட்டுமே உள்ள சில பத்திரிகைகளை/ கதைகளை நீங்கள் படித்ததுதான்.

நீலப்படம் பற்றி அறிந்து கொள்ள பின்னோக்கிச் சென்று பிரெஞ்சுப் புரட்சிக் காலத்துக்குச் செல்ல வேண்டும்.

ஆபாச / காமக் கதைகள் பிரெஞ்சு அரண்மனைவாசிகளுக்காக எழுதப்பட்டதே துவக்கமாகும்.

அவை எழுதுவதற்குப் பயன்பட்ட காகிதம் அரசு ஆவணங்களை எழுதப் பயன்பட்ட அதே காகிதங்களே! தற்செயலாக அக்காகிதம் நீல நிறத்தில் இருந்துவிட்டது.

அதன் பிறகு எல்லா ஆபாச / காமச் செய்திகளும் "புளூமெடீரியல்" என அழைக்கப்பட்டன என ஒரு கருத்து உள்ளது.

ஆபாசச் சலனப் படங்கள் அக்காலத்தில் கறுப்பு வெள்ளையில் படம்பிடிக்கப்பட்டாலும், விரைவாகவும் எளிதாகவும் 'டெவலப்' செய்வதற்கு நீலவண்ணப் பூச்சு கொடுக்கபட்டது. அன்றிலிருந்து அவ்வகைப் படங்கள் "நீலப்படங்கள்" என அழைக்கப் பட்டன என்ற மற்றொரு கருத்தும் உண்டு.


விபச்சாரத்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் உள்ள தொடர்பு நூற்றாண்டுகள் பழமையானது.


பைபிள் கதையில், இஸ்ரேலியப் படையினருக்கு உதவிய விபச்சாரி 'ரகாபி''ன் வீட்டை அடையாளம் காண அவர்கள் "சிவப்பு நூலை"க் கட்டியிருந்தனராம்.

1890 களில் அமெரிக்காவில் விபச்சாரிகளின் வீடுகளுக்குச் செல்லும் ரயில்வே ஊழியர்கள், அவசரத் தேவகளுக்காகத் தாமிருக்கும் இடத்தைத் தம் சக ஊழியர்களுக்குத் தெரிவிப்பதற்காகச் சிவப்பு விளக்குகளை அவ்வீடுகளின் முன்பாக மாட்டி விடுவராம்.

பண்டைய சீனாவில், விபச்சாரிகள் தம் வீடுகளுக்கு முன்னால் பொருத்தப் பட்டிருக்கும் விளக்குகளைச் சிவப்பு வண்ணக் காகிதத்தால் பொதிந்திருப்பர் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

முதலாம் உலகப்போர் காலத்தில் பெல்ஜியத்திலும் பிரான்சிலும் அதிகாரிகளுக்கான விபச்சார விடுதிகளில் நீல விளக்குகளும் சாதாரண வீரர்களுக்கான விபச்சார விடுதிகளில் சிவப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன என்பது உபரித் தகவல்.




எறும்பு ஏன் மனிதனைக் கடிக்கிறது? - சிங்காரம்

எறும்புகள் கடிப்பதில்லை. குளவி, தேனீ போன்று கொடுக்கினால் குத்தும்.

எறும்பு அதன் எல்லைக்குள் நீங்கள் கால் அல்லது கையை விடும்போது தற்காப்பிற்காகவே கொடுக்கால் குத்தும்.

அக்கொடுக்கில் இருந்து செலுத்தப்படும் ஃபோர்மிக் அமிலம் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது.




பனிக்கரடி (மட்டும்) இடக்கை பழக்கமுள்ளது என படித்துள்ளேன். மிருகம் பறவை இவற்றில் மாறுகண் (கோங்கண்ணு) உடையதாக பிறக்குமா? - சார்லஸ்

நீங்கள் இரண்டு வினாக்களை எழுப்பியுள்ளீர்கள். விடையளிப்பதற்கு வாய்ப்பாக ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.


பனிக்கரடி இடக்கைப் பழக்கமுள்ளது என்று சொல்லப்படுவது கர்ணபரம்பரையான நம்பிக்கை. அதனாலோ என்னவோ பனிக்கரடியைப் படம் வரைபவர்களும் அப்படியே வரைகின்றனர். படம் பார்க்க:


எல்லா மிருகங்களையும் போலவே பனிக்கரடியும் இரு கைகளையும் (முன்னிரு கால்களையும்) பயன்படுத்தும். சில விதிவிலக்காக அமைந்திருக்கலாம். அதை வைத்துக் கொண்டு பனிக்கரடி இனமே இடக்கைப் பழக்கமுள்ளது எனக்கூற ஆதாரமில்லை.


அடுத்து விலங்குகள் பறவைகள் மாறுகண்ணுடன் பிறக்குமா என்ற வினா... இரு கண்களும் ஒரு பொருளை ஒரே பார்வையில் தெளிவாகப் பார்க்க வேண்டும். நாம் பார்க்கும் பொருளின் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவிவதால் பொருளின் பிம்பம் தோன்றும். இதற்குக் கண்களின் தசைநார்கள் உதவுகின்றன. இதில் கோளாறு வந்தால் மாறுகண் வரும் என்கின்றனர் மருத்துவர். விலங்கு, பறவைகளைப் பொறுத்த மட்டில் வெவ்வேறு நிலைகளில் அவற்றின் ஒளிஉணரும் ஆற்றல்கள் உள்ளன. சில ஒளி அல்லது இருளை மட்டும் உணரவல்லன. சில காட்சிகளை உணரவல்லன. இரு கண்களும் ஒரே சீராக உணர இயலாவிட்டால் மாறுகண் சிக்கல் பறவை / விலங்குகளுக்கும் ஏற்படலாம்.

 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்