இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 11,331 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர இலவச இரயில் பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது சுமார் 1,70,634 பேருக்கு தியாகிகள் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில வாரியாக தற்போது உதவித் தொகை பெறுவோர் எண்ணிக்கை வருமாறு:
பீகார், ஜார்கண்ட் - 24,876
மேற்கு வங்கம் - 22,487
உ.பி., உத்தர்காண்ட் - 17,993
மகாராஷ்டிரா - 17,897
ஆந்திரப் பிரதேசம் - 14,658
கர்நாடகா - 10,090
தமிழ்நாடு - 4,109
குஜராத் - 3,598
டில்லி - 2,044
இவர்களில் 22,468 பேர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் என்ற பிரிவினரில் அடங்குவர்.
கடந்த 2008 - 09 ஆம் நிதியாண்டில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு உதவித் தொகையாக மத்திய அரசு 640 கோடியே 64 இலட்சத்து 93 ஆயிரத்து 197 ரூபாய்களை வழங்கியுள்ளது. மேலும் இவர்களின் வேறுபல நலத்திட்டங்களுக்காக 5 கோடி ரூபாய்களை செலவழித்துள்ளது.
இத்தகைய உதவித் தொகையைப் பெறுவதற்காக மேலும் சுமார் 1 இலட்சத்து 71 ஆயிரம் பேர் மனு செய்துவிட்டு காத்திருப்பதாகவும், இவற்றில் 20 ஆயிரம் மனுக்களை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் படி அமைச்சக அதிகாரிகள் பரிசீலனை செய்து முடித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உதவித் தொகை கேட்டு தாமதமானால், மனுதாரர் நீதிமன்றங்களை நாடுவதும், உதவித் தொகையை வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடுவதும் அவ்வப்போதைய செய்திகளாக உள்ளன. 2008ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2009 நவம்பவர் இறுதிவரை இத்தகைய 54 வழக்குகளில் நீதிமன்றங்கள் உதவித் தொகை வழங்க அரசை உத்தரவிட்டுள்ளன. ஆந்திரா உயர் நீதிமன்றம் 19 பேருக்கும் கேரளா உயர் நீதிமன்றம் 17 பேருக்கும் இத்தகைய உதவிகளை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளன. நாடு முழுவதும் 2,500 முதல் 3,000 வரையிலான தியாகிகள் உதவித் தொகை வழக்குகள் நிலுவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரத்திற்காப் போராடிய, இன்னல்களை ஏற்ற தியாகிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து காத்திருப்போர் 1,71 ஆயிரம் பேர் என்ற தகவல் அதிர்ச்சியடையச் செய்கிறது.
உண்மையிலேயே அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடி உள்ளனரா? போராடி உள்ளனர் எனில், அவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளை என்ன செய்யலாம்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. விடை கிடைக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




