இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (30-12-2009)

E-mail அச்செடுக்க

 

 

 

பரந்து விரிந்த இந்தியாவுக்கு தலைநகர் டெல்லியில் இருப்பதைவிட மத்திய மாநிலங்கள் ஏதேனும் ஒன்றில் இருந்தால் நல்லதுதானே? - சுரேஷ்

நல்லதுதான். அதுபோல்தான் உச்சநீதிமன்றத்தின் கிளை நாட்டின் நடுவில் தேவை என்று கோரிக்கை வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் இருப்பதைப்போல மாநிலங்களின் தலைநகரங்களும் நடுவில் அமைவது நல்லது.

எம்.ஜி.ஆர். திருச்சியைத் தலைநகராக்க முயன்றது நல்ல நடவடிக்கையாக இருந்தது.

அனைத்து மாநிலங்களிலும் தலைநகர் நடுவே அமைந்தால் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நல்லது.

சான்றுக்குக் கேரள மாநிலத்தின் தலைநகர் இருப்பது மாநிலத்தின் தென்கோடியில். கர்நாடக மாநிலத்தின் தலைநகரும் சற்றொப்ப அவ்வாறே. தமிழ்நாட்டில் வடகோடியில்.




ஈரான் அணுசக்தி தயாரிப்பதால் அமெரிக்காவுக்கு என்ன நஷ்டம்? - மதிவாணன்


ஈரான் அணு ஆயுத ஆற்றல் பெற்றுவிட்டால் அமெரிக்காவின் தத்துப்பிள்ளையான இஸ்ரேலுக்குத்தான் முதல் ஆபத்து.

மட்டுமின்றி, அரபுவளைகுடாப் பகுதியில் ஈரான் மேலாதிக்கம் பெற்று விட்டால் அமெரிக்காவுக்கு நீண்டநாட்கள் அரபுநாடுகளைத் தன் அடிமையாக வைத்திருக்க முடியாமல் ஆகிவிடும்.

அணுஆற்றல் பெற்ற ஈரான்அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுக்கும் வடகொரியாவுடன் இணைந்து விட்டாலும் வியப்பில்லை.

எனவேதான் "அங்கிள் ஸாம் "அச்சப்படுகிறார்.



உலக தமிழ் செம்மொழி மாநாட்டிலும் கலைஞருக்கு விருது வழங்கப்படுமா? - ஆனந்தி

வழங்கப்பட்டால் வியப்பதற்கில்லை!




மோசடி - ராஜதந்திரம் அரசியல் சான்றுகளுடன் விளக்க முடியுமா? - கவிதா


இந்த வினாவுக்குரிய விடைக்குச் சான்று காட்டக் கருணாநிதியைத் தவிர பொருத்தமான ஆள் வேறில்லை.

ம.தி.மு.க.வில், கோபாலசாமிக்கு நம்பகமாக இருந்து வந்த கண்ணப்பனையும் கம்பம் ராமகிருஷ்ணனையும் அ.தி.மு.க.வில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனையும் பிரித்தது ராஜதந்திரம்.

ராமகிருஷ்ணனையும் ராதாகிருஷ்ணனையும் அவர்கள் ராஜினாமா செய்த தொகுதியில் மீண்டும் தி.மு.க. சார்பாகப் போட்டியிடச் செய்தது மோசடி.




காதலன் படத்தில் வரும் ஊர்வசி பாடலில் "ஆண்களில் ராமன் கிடையாது" என்று ஒரு வரி வருகிறதே! நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது ஆண்களும் ஒரு மனைவியுடன் தானே வாழ்கிறார்கள்.? - ஆனந்த்


பாடலில் கவிஞர் வைரமுத்து சொன்னது சரிதான்.

"வந்தெனைக் கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிற விக்கிரு மாதரைச் சிந்தை யாலுந் தொடேனென்ற செவ்வரம் தந்த" எனக் கம்பன் குறிப்பிடுகிறான்.

ராமன், காவியத் தலைவன். அதனால் சீதையை விடுத்து எந்த ஒரு பெண்ணையும் உள்ளத்தினாலும் தொடமாட்டேன் என்று உறுதி கூறினான்.

ஆனால் பொதுவே ஆண்களின் கண்களுக்கு அடுத்தவன் மனைவிதான் அழகானவளாய்த் தெரிவாள். மணம் முடித்த ஆண்களில் ஒருசாரார், அழகான பெண்களைப் பார்க்கும்போது, "கல்யாணத்துக்கு அவசரப்பட்டு விட்டோமோ" என்று நினைப்பதும் உண்டு.

மட்டுமின்றிச் சின்ன வீடு, தொடுப்பு, அவ்வப்போது தொட்டுக்கொள்வது என ஆண்கள் பலர் EXTRA MARITAL RELATIONSHIP வைத்துக் கொள்வதில்லையா?

இந்த உண்மையையே கவிஞர் கூறியுள்ளார்.




புதுக்கவிதையால் தமிழ் மொழி வளம் பெற்றுள்ளதா? - கவிதாசன்


ஆம்! தேங்கி நின்றால் நாறும் குட்டை; ஓடிக்கொண்டிருந்தால் வளம் தரும் பேராறு.

மொழியும் அவ்வாறே! புதுப்புது கலைச்சொற்கள், இலக்கிய வடிவங்கள், அதைத் தொடர்ந்த இலக்கண வளர்ச்சி என நீளமாகவும் ஆழமாகவும் பரந்தும் போனால்தான் மொழி வாழும்.

அல்லது லத்தீன், ஸமஸ்க்ருதம் போலச் சாகும்.

சங்க காலத்தில் ஒரு மொழி நடை; செய்யுள் வடிவம்.

சங்கம் மருவிய காலத்தில் வேறு ஒரு நடை; வெண்பா வடிவம்.

இடைக்கால இலக்கிய வரலாற்றில் மற்றொரு மொழிநடை, விருத்தப்பாவின் வளர்ச்சி!

கம்பன் கவிதை விருத்தத்தின் உயர்ச்சி!

மறுமலர்ச்சிக் காலத்தில் பாரதி, பாரதிதாசன் கண்ணதாசன் போன்றோரின் முயற்சி!

அதன் பின் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் , சி.சு.செல்லப்பா போன்றோரால் வளர்ந்த புதுக்கவிதை.

கவிதையில் உண்மை இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும்;சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இலக்கணச் சட்டத்துக்குள் சொற்களைத் திணித்தால் அது கவிதையாகாது என உணர்ந்தோரால் புதுக்கவிதைமுயற்சி துவங்கப்பட்டது. ஆங்கில் மொழியில் டி.எஸ்.இலியட் துவங்கினார். தமிழில் முன் சொன்ன ந.பி., கு.ப.ரா., சி.சு.செ. போன்றோர் துவங்கினர். இதற்கு ஆதரவாகப் புதுமைப்பித்தன்,

"பண்ணென்பார் பாவமென்பார் பண்புமர பென்றிடுவார் கண்ணைச் செருகிக் கவி என்பார் -- அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே முட்டாளே இன்னமுமா பாட்டு"

என, வெண்பா எழுதினார்.

"எண்ணத்தை அதன் பிறப்பிடத்திலேயே பிடித்துவிடுவது புதுக்கவிதை" என்பர்.

"இரவில் பெற்றோம் இன்னும் விடியவே இல்லை" என்ற புதுக்கவிதையைப் பாருங்கள்.

விடுதலை பெற்ற இந்தியா பற்றி எத்தனை பெரிய உண்மையை உணர்ச்சியுடன் கூறிச் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இக்கவிதை என்பதைப் புரிந்துகொண்டீர்களா?

ஆனால் வனிக இதழ்களில் புதுக்கவிதை என்ற பெயரில் நிறைய அச்சேறுகின்ற பலவும் களைகளே! அவற்றுள் நன்மணியைக் காணவேண்டும்.

அப்படிப் பல்லாண்டுகளுக்கு முன் ராணி இதழில் கண்டதில் ஒரு மணி :--

"நானும் பாபரி மஸ்ஜிதும் ஒன்றுதான்; எல்லாரும் என்னை இடிக்கவே ஆசைப்படுகிறார்கள்; கட்டத்தான் ஆளில்லை"


கண்ணகி தன் ஒரு பக்க மார்பைத் திருகி எறிந்து மதுரையை எரித்தாள் எனப் பாடத்தில் படித்துள்ளேன். இது எப்படி சாத்தியம்? - கண்ணன்


"யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து "

எனச் சிலப்பதிகாரம் (வஞ்சினமாலலை) கூறுகிறது.

இது உருவகமான செய்தியாகலாம்.

குற்றமிழைத்த கொற்றவனின் அநீதிக்கெதிரான கொதிப்பு, மதுரையை எரித்தது.

"மாத்தியோசி கண்ணா"

சமீபத்தில் (02/12/2009 ஆனந்தவிகடன் இதழில்) ஒரு கதை படித்தேன். ச.பாலமுருகன் எழுதிய "அவளை நீங்களும் அறிவீர்கள்" என்ற கதை உங்கள் ஐயத்திற்குத் தீர்வளிக்கலாம்!

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தம்பதியரில் கணவன், தன் மனைவியை ஓரிடத்தில் அமருமாறு கூறிவிட்டு, நகரத்துக்குள் செல்கிறான். நீண்ட நேரம் ஆகியும் கணவன் திரும்பி வராத நிலையில், வழிப்போக்கர்கள், 'ஒரு வெளிநாட்டினனை ஒற்றன் என ஐயுற்று அரச படை கொலை செய்து விட்ட'தாகப் பேசிச் செல்வதைச் செவியுறுகிறாள் மனைவி.

தன் கணவாக இருக்குமோ என்று ஐயுற்று, அவள், அவனைத் தேடிச் செல்லும்போது எரியும் சிதையில் கணவனின் உடலைக் காண்கிறாள். அருகில் சென்று பார்க்க ஓடும் அவளைச் 'சிதையில் பாயப்போகிறாள்' என எண்ணும் நாட்டார் தடுத்துப் பிடிக்கின்றனர். சிதையிலிருந்து எரியும் கொள்ளி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு ஆவேசமாக் அவள் நகரத்துக்குள் செல்லும்போது, அவள் கையிலிருந்த நெருப்புக் கொள்ளியால் வீடுகள் எரிகின்றன. (கதையின் இறுதிப்பகுதியின் சுருக்கம்)

இப்போது இதைக் கண்ணகிக்குப் பொருத்திப் பாருங்கள்.ஐயம் விலகும்.

இடமுலை திருகி மதுரையை எரித்தது காப்பியச் சுவைக்காகவும் கதைத் தலைவியை தெய்வமாக்கவும் இளங்கோ கொடுத்த 'பில்ட்அப்' எனலாம்.




முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? - ஹாரூன் ரஷீத்

தீவிரவாதத்தை மதத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது.

இது வணங்காமுடியின் கருத்து மட்டுமன்று.

மாலெகான் வெடிகுண்டு வழக்கில் பெண்சாமியார் ப்ரக்யாஸிங் தாகூர் கைது செய்யப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சொன்னதும் இதுதான்.

தீவிரவாதம் தொடர்பாக முன்னர் ஒரு வாசகரின் வினாவுக்கு அளிக்கப்பட்டிருந்த விடையையும் பாருங்கள்.

 

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்