சந்திரசேகர ராவின் சாகும்வரை உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும்பொருட்டு, தனித் தெலுங்கானா அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று டிசம்பர் 9ல் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்பால் தெலுங்கானாவைத் தவிர ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டம் வெடித்து விட்டது. இதை சமாளிப்பதற்காக தெலங்கானா மாநிலம் அமைப்பது பற்றி அரசியல் கட்சிகள், மற்றும் பிற அமைப்புகளிடம் இன்னும் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என்று இன்னொரு அறிவிப்பை ப. சிதம்பரம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை கிடப்பில் போடுவது என்ற இந்த அறிவிப்பால் ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டம் ஓய்ந்த போதிலும், தெலுங்கானா பகுதியில் மீண்டும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்த குழப்பத்தில் இருந்து இப்போதைக்கு விடுபடுவதற்கு என்ன செய்யலாம்? என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்டது போல் மீண்டும் மாநில மறு சீரமைப்பு கமிஷன் அமைப்பது பற்றி யோசிக்கப்படுவதாக டெல்லி வட்டாரம் கூறுகிறது.
மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைப்பது, உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து பண்டல்காண்ட், ஹரீத் மாநிலங்கள் அமைப்பது, மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் இருந்து எழுந்துள்ள பிற கோரிக்கைகள் பற்றி இக் கமிஷன் பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை செய்யும். ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் மாநில மறு சீரமைப்புக் கமிஷனில் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று கோரிக்கைகளை பெறுவார்கள். அங்குள்ள நிலவரத்தை ஆராய்வார்கள். புதிய மாநிலங்கள் அமைப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அதற்குள் இப்போதுள்ள சூட்டை தணித்து விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




