
சேதுக் கால்வாய் திட்டத்தை இலங்கை தொடங்கியிருந்தால் சுப்ரமணியசாமியும் பாஜகவும் எந்தக் கோர்ட்டில்போய் வழக்கு நடத்துவார்கள்? - சின்னி 
சேதுக்கால்வாய் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்டது. 1860களிலிருந்தே அதற்கான முயற்சிகள் துவங்கப் பட்டுவிட்டன.விடுதலை பெற்ற பின் சேதுக்கால்வாய்த் திட்டம் அரசியல்வாதிகளால் தத்தம் சுய மற்றும் கட்சி நலன்களுக்காகச் சீரழிக்கப் பட்டுவிட்டது. இயற்கையான மணல் திட்டை ராமர் பாலம் என்று சொல்லி, இந்தியாவில் வழக்குப்போட முடிந்தது. அதற்கு அரசும் முறையான மறுமொழியும் கொடுத்தது. பின் அரசியல் மற்றும் வாக்குப் பொறுக்கும் தந்திரத்துக்காகத் தன் மறுமொழியை மாற்றியது பெரும் சோகமான நகைச்சுவை.
சேதுத் திட்டத்தை இலங்கை தொடங்கியிருந்தால் சு.சாமியும் பாஜகவும் மட்டுமின்றி, அனைத்துக் கட்சியினரும் தம் எதிர்ப்பைக் காட்டி அரசியல் லாபம் தேட முயன்றிருப்பர். வழக்குப்போட மாட்டார்கள்.
விலைவாசி உயர்வுக்கு உலக வெப்பமயமே காரணம் என்று மத்திய அமைச்சர் சரத் பவார் சொல்வது சரியா? - மரிய குமாரன்
இந்தியாவிற்கு மட்டுமா உலக வெப்பமயம்?
காவிரி பிரச்சனைக்காக பிறந்ததிலிருந்தே போராடி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து? - குமார்
வயதானால் குழந்தைத்தனம் வந்துவிடும் என்று பொதுவே சொல்வர். கருணாநிதியின் இந்தக் கூற்றையும் குழந்தைத்தனமான (childish) பேச்சு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் பிறந்து, வளர்ந்து, திரைப்படங்களில் பணிபுரிந்து, அரசியலுக்கு வந்தபிறகு வேண்டுமெனில் காவிரிப் பிரச்சனை பற்றிப் பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக ஒரேயடியாக, "கேட்பவனெல்லாம் கேணையன்" என்ற எண்ணத்தில் பிட்டுப்போடுவது முதலமைச்சர் பதவிக்கு அழகில்லை.
வாசகர்கள் கேள்வி, மனைவியின் கேள்வி - வணங்காமுடியாருக்கு பதில் சொல்ல எது எளிது? - அரவிந்தன்
முதலாவதே! வாசகர், தளத்தில்/ மின்மடலில் கேட்பதால், சிந்தித்து, பொருத்தம் என நான் நினைக்கும் பதில் சொல்ல முடியும்.
மனைவி, நேரிலோ தொலைபேசியிலோ கேட்பதால் உடனே பதில் சொல்ல வேண்டும்; துணைக் கேள்விகள் துளைக்கும்.
சிதம்பரேசுவரர், கூளப்ப நாயக்கர் விறலி விடு தூது படித்திருக்கிறீர்களா? - கோபால்
உங்கள் வினா புரியவில்லை. ஆர்வக்கோளாறல் குழப்பியுள்ளீர்கள். சிற்றிலக்கிய வகையில் ஒன்றான 'சிதம்பரேசுவரர் வண்ணம்' பதினெட்டாம் நூறாண்டில் - தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார் என்பவரால் இயற்றப்பட்டது எனப்படித்துளேன்.
கூளப்பநாயக்கன் காதல் என்பதும் விறலிவிடு தூது என்பதும் இரு நூற்கள். ஆனால் இயற்றியவர் ஒருவரே! சுப்ரதீபகக்விராயர்.
நல்ல சிற்றிலக்கியங்கள்.
ஒரு மொழி எந்த அளவுக்கு வேற்று மொழிச் சொற்களை உள்வாங்கிக் கொள்ளலாம்? உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் catamaran, avatar போன்றவையெல்லாம் ஆங்கில வார்த்தைகளாகவே மாறிவிட்டனவே? - இளங்கோ
ஒரு மொழி பிறமொழிக் கலப்பில்லாமல் தூய்மையாக இயங்க முடியும். ஆனால், நாள்தோறும் வளரும் அறிவியல் மற்றும் தொழிற்புரட்சிகளில் கண்டுபிடிக்கப்படும் பொறிகளுக்கும் பொருட்களுக்கும் உரிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்.
பா.ஜ.க உதிய தலைவர் கட்காரி ராமர் கோவில் பற்றி எதுவும் சொல்லவில்லையே? - ஆபிதீன்
தேர்தல் நெருங்கும்போது சொல்வார்.
இடைத் தேர்தலில் மட்டும் 75 % முதல் 85 % வரையிலான வாக்குகள் பதிவாவது எதைக் காட்டுகிறது ? - செல்வன்
கட்சிகளின் -- குறிப்பாக ஆளும் கட்சியின் -- உழைப்பையும் ஆர்வத்தையும் காட்டுகின்றது.
மக்களின் கோடிக் கணக்கான வரிப் பணத்தை போட்டு தொடங்கப் பட்ட அரசு கேபிள் டி .வி எப்போது சேவையைத் தொடங்கும்? - முத்து கிருஷ்ணன்
முதல்வர் கருணாநிதிக்கு எதிராகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்படும்போது.
லஞ்சத்தில் கொழிக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நீங்கள் ஆட்சியில் இருந்தால் என்ன தண்டனை கொடுப்பீர்கள்? - லஷ்மி
சட்டம் அதன் கடமையைச் செய்தாலே போதும்.
வணங்காமுடிக்கு ஆட்சியோ அரசோ தேவையில்லை.
வணங்காமுடி பதில்களில் கருணாநிதி எதிர்ப்பு அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறதே. ஏன்? - வாசகன்
உங்கள் வினா ஒருதலைப்பட்சமானது.
தவறுகண்டால் எதிர்ப்பதும் நல்லவை கண்டால் பாராட்டுவதும் நம் இயல்பு.
மு.க. அழகிரி, ஸ்டாலின் குறித்த வினாக்களில் நாம் நடுநிலையோடு விடை தந்துள்ளோம்.
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




