மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராகப் பதவி வகித்த ஜோதிபாசு, மக்களின் தலைவராக பல்வேறு சாதனைகளைச் செய்தவர். மிகச் சிறந்த நிர்வாகி என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தன்னுடைய இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
பாசுவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநில அளவிலும் தேசிய அளவிலும் வழிகாட்டக்கூடிய தலைவராக விளங்கினார் என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்கம் மற்றும் நாட்டின் முக்கியமான விசயங்களில் ஜோதிபாசுவிடம் ஆலோசனை செய்வது தமக்கு வழக்கம் என்றும் கூறியுள்ளார்.
ஜோதிபாசு அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி. மிகச் சிறந்த நிர்வாகி. மேற்கு வங்க மாநில முதல்வராக சிறப்பாகப் பணியாற்றியவர் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
நாடு அரசியல் ரீதியிலான குழப்பங்களைச் சந்தித்தபோதெல்லாம் அரசியல் கட்சிகளை வழிநடத்தியவர் ஜோதிபாசுதான். கம்யூனிஸ்டுகளின் அரசராக அவர் திகழ்ந்தார் என்று முன்னாள் பிரதமர் தேவகெளடா கூறியுள்ளார்.
ஜோதிபாசுவின் மரண செய்தி கேட்டு தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இரயில்வே அமைச்சருமான மம்தா பாணர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மற்றும் இறுதி அத்தியாயம் ஜோதிபாசு என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய மிகச் சிறந்த நண்பர் ஜோதிபாசு என்று கூறியுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது தாம் மிகவும் துக்கமுற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஜோதிபாசுவின் மரணம் நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. நாடு ஒரு உண்மையான தேசபக்தரை இழந்துவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜோதிபாசுவின் மறைவுக்கு பாஜக தலைவர் அத்வானி, தமிழக கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் இராமதாஸ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




