ஹைத்தி: பயங்கர பூகம்பத்தின் விளைவால் சுடுகாடாக காட்சியளிக்கும் ஹைத்தியில் சாகும் நிலையில் உள்ள குழந்தை ஒன்றுக்கு ஊசி மூலம் மருத்துவர்கள் உணவளித்து வருகிறார்கள். அது பூகம்பத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு பிறந்த குழந்தை. 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் குழந்தையின் தாய், "தன்னால் அதைப் பராமரிக்க முடியாது என்று கூறிவிட்டு வரிசையில் நின்று உணவு வாங்கச் சென்றுவிட்டார்" என்று கூறுகிறார், ஹைட்டியில் உதவி புரியும் மருத்துவர்களில் ஒருவரான ஜோஷி.ஒரு சில நிமிடங்களே நீடித்து ரிக்டர் அளவுகோலில் 7.0 என பதிவாகிய பூகம்பம், ஹைட்டியில் சுமார் 3,00,000 க்கும் மேற்பட்டவர்களை இன்று வீடு இழந்தவர்களாகவும், வேலை இழந்தவர்களாகவும் ஆக்கி விட்டது. பூகம்பத்திற்கு முன் ஹைட்டியில் 3,80,000 அநாதை குழந்தைகளிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. பூகம்பத்தில் இதுவரை வெளியான தகவல்களின் படி கிட்டதட்ட 2,00,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கும் நிலையில், மேலும் 1,00,000 குழந்தைகள் அனாதைகளாக ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில தன்னார்வ அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயலால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். மேலும் வறுமையின் காரணமாக பலர் தங்கள் குழந்தைகளை அப்படியே விட்டு விட்டு, வறுமையினால் உருவான வன்முறைக் கூட்டங்களில் கலந்து விட்டனர். 80 சதவிதம் வறுமையில் வாடும் இந்த நாடு தொடர்ந்து புயல், பூகம்பம் என பல இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகி விட்டது.
படுக்கை விரிப்புகளையும், உணவுப் பொருட்களையும் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கியிடையிலிருந்து பொறுக்கி எடுத்து, அவற்றின் உதவியோடு மரங்களின் நிழல்களில் பலர் வசித்து வருகிறார்கள். சர்வதேச நிறுவனங்கள் நிவாரண பொருட்களை தரத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும் இந்த நிவாரணப் பொருட்கள் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையே அதிகம் சென்றடைகிறது. பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து மற்ற உறவினர்களுடன் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கேட்சியா ஜோசப் என்ற நான்கு வயது சிறுமி தனது கறை படிந்த ஆடையுடன், முகாமைச் சுற்றி சுற்றி வந்தாலும் அவளுக்குத் தெரிந்த முகங்கள் அங்கு யாருமே இல்லை. நவம்பரில் அவளது தந்தை இறந்த பின் அவளது தாயும், பாட்டியும் தங்களுக்கே வாழ்வதற்கான போதிய வசதிகள் இல்லாத நிலையில் இருந்த போது, 55 வயதான பாப் போஃப் என்பவர் அச்சிறுமியை மீட்டு வந்து வேறு குடும்பங்கள் ஏதேனும் தத்து எடுக்க வைப்பதற்கான முயற்சி செய்து வருகிறார். அவள் தத்தெடுத்து தங்கிய அநாதை விடுதி பூகம்பத்தில் இடிந்து விழுந்து விட்டதால், அவள் தற்போது முகாமில் வசித்து வருகிறாள். எங்கே அவளது குழந்தை பருவம் இந்த முகாமிலேயே கழிந்து விடுமோ என போஃப் அச்சம் தெரிவித்துள்ளார்.
பூகம்ப நிவாரண உதவிகளுடன் வரும் பல நாடுகள், ஹைட்டியில் அநாதை ஆக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு செல்ல முன் வருவதால் எல்லா பெற்றோர்களும் அதையே காரணம் ஆக்கி தங்கள் குழந்தைகளை அநாதைகளாக விட்டு விடுவார்களோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பல குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். முன்பு 2005ஆம் ஆண்டில் காஷ்மீரில் ஏற்பட்ட பூகம்பத்தினாலும், தமிழகத்தில் சுனாமியினாலும் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இருந்து தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளை விட இந்த எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கடந்த ஞாயிறு அன்று 33 குழந்தைகள் பிரான்சில் அவர்களை தத்து எடுத்த குடும்பங்களுக்குச் சென்று சேர்ந்துள்ளனர். அதற்கு முன் 55 குழந்தைகள் அமெரிக்காவிற்கும் சென்றடைந்துள்ளனர்.
"மேலும் பல குழந்தைகள் ஹைட்டியில் உள்ள போர்டபிரின்சில் உதவி கோரும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அவசர உதவி தேவை. அதுவும் அவர்களுக்கு அது இங்கேயே தேவை. அவர்கள் வெளிநாடுகளுக்கு எடுத்து சென்று தர தேவையில்லை" என்று யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.
நிவாரண அமைப்புகள் பல குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ள வருகிறது. ஆனால் அவர்கள் தத்துடுத்து கொள்வதற்கு முன் முதலில் பதிவு செய்து அவர்களுக்கு வேறு யாரேனும் உறவினர்கள் உள்ளார்களா என்று அலசப்படுகிறது. உறவினர்கள் உள்ள எவரும் பிரிந்து விடாமல் இருக்க அமைப்புகள் முயற்சிகளை மேற்கொள்கிறது.
"பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. உயிரோடு இருக்கும் உறவினர்களிடம் சேர்த்து வைக்க வேண்டிய குழந்தைகளை கண்டிப்பாக சேர்த்து வைக்கும் நடவடிக்கையில் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அவசரப்பட்டு யாரையும் வெளிநாடு அனுப்பி அநாதையாக விட்டு விட முடியாது" என்று குழந்தைகளை காக்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறுகிறது. "பெற்றோரும், உறவினர்களும் இல்லை என்று நன்கு சோதித்து அறிந்த பிறகே வெளிநாடுகளுக்கு அக்குழந்தைகள் தத்து கொடுக்கப்படும்" என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
உணவுக்கு வழியின்றி அழுதுச் சென்ற அந்த ஒரு மாத குழந்தையின் தாய் மீண்டும் அந்த மருத்துவமனைக்கே திரும்பி தன் குழந்தையிடம் வந்து விட்டாள். தனக்கே உணவுக்கு வழி இல்லாத போதும் தன் குழந்தையிடம் திரும்பி விட்ட அந்தப் பெண், அடுத்து என்ன செய்வது என்று அவளுகே தெரியாமல் பித்து பிடித்தது போன்று அமர்ந்திருப்பதாக மருத்துவர் ஜோஷி கூறுகிறார்.
இன்றைய ஹைட்டியின் காட்சி இது தான். அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவின்றியும் அரவணைப்பார் யாருமின்றியும் அலையும் மனிதர்கள். அவர்களுக்கு உதவுவதற்காக அலையும் மற்றொரு மனிதர்கள் கூட்டம்!
இயற்கையின் சீற்றங்கள் சில வேளைகளில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மென்று விழுங்கி விடுகிறது. உலகின் ஓட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, அடுத்து என்ன என்ற கேள்விக்குறியோடு வெற்றுப் பார்வைகளுடன் வெறித்திருக்கும் ஹைட்டியின் மக்கள், அதிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.
சிறப்பு பார்வை - சசி மயூர்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




