"சென்னை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்" என மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ரிப்), மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் பாலம் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் வாசன் தலைமையில் சென்னையில் நேற்று(திங்கள்கிழமை-08/02/2010) அன்று நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இப்போது நிலுவையில் இருந்து வரும் ரூ.600 கோடி மதிப்பிலான எண்ணூர்-மணலி சாலை விரிவாக்கத் திட்டம், ரூ.1,655 கோடியிலான மதுரவாயல் பறக்கும் பாலத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடங்கல்கள், காரணங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் விவாதித்தனர். இந்த இரண்டு இணைப்புச் சாலைகளை விரைந்து அமைப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களைக் கையாள்வது அதிகரிக்கும். இத்திட்டங்களை நிறைவேற்ற கப்பல் துறை தனது பங்களிப்பை விரைந்து நிறைவேற்றும். மாநில அரசு தரப்பிலும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர். இத்திட்டங்களை நிறைவேற்ற 2 ஆண்டு காலம் ஆகும்.
பறக்கும் மேம்பால திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் விரைவில் கிடைக்கும். இதற்கு சாதகமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கப்படும். புதிதாக அமைய உள்ள எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலையில் சுங்கக் கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும்.
இது குறித்து முன்பிருந்த நிலை குறித்து ஏதும் கூற இயலாது. மாநகர பகுதிகளில் இச்சாலை அமைக்கப்பட்டாலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் மாற்றம் ஏதும் இல்லை. இத்திட்டத்தில் சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், மத்திய மாநில நெடுஞ்சாலைத் துறைகள் பங்குதாரர்களாக உள்ளன" என்று கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




