"மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் தங்களது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து அவைக்கு வருகை தருவதைக் கட்டாயமாக்க தேவையெனில் சட்டம் கொண்டு வரப்படும்" என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார்.
சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று (08/02/2010) நடைபெற்ற 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசும் போது, "எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு உயர் தொழில்கல்வி பயின்று, போட்டிகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் திறன்களை மாணவ, மாணவிகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் திகழப்போகும் மாணவ சமுதாயம், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மனிதாபிமானத்தையும், சேவையையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
நவீன இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளாக மாணவர்களை உருவாக்கும் மகத்தான பொறுப்பு, நவீன கோயில்களாகத் திகழும் கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.
ஒரு வருடத் தேவையெனில் ஏதேனும் தானியங்களையும், 10 வருடத் தேவையெனில் ஏதேனும் மரங்களையும் பயிரிடுங்கள். நூறு வருடமெனில் மனிதர்களை உருவாக்குங்கள் என்பது சீனப் பழமொழி.
எந்த ஒரு நாடும் அதன் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கவில்லை என்றால் அந்த நாடு முன்னேறவே முடியாது. எனவே இளைஞர்களான நீங்கள் பெண்களுக்கு வாய்ப்பளிக்க முன்வருவதுடன், வரதட்சிணை,பால்வேறுபாடு, குடும்ப வன்முறை, கருக்கலைப்பு ஆகிய பெண்களுக்கு எதிரான சமூகத் தீமைகளை ஒழிக்க முன்வரவேண்டும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




