இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது என்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே கருத்து வெளியிட்டுள்ளார்.அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும் அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறினார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.
பொன்சேகாவை மிருகத்தைப் போல இழுத்துச் சென்றதாக அவரின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். பொன்சேகாவை சந்திக்க செவ்வாயன்று அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக செய்திகள் கூறுன்றன. இந்த கைது நடவடிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டித்துள்ளது. பொன்சேகா தவறு செய்திருந்தால் அவரை உரிய முறையில் விசாரிக்கலாம் என்றும் இப்படி ஏதேச்சதிகாரமாக செயல்படக் கூடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




