இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!

E-mail அச்செடுக்க
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்யும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்யும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு தீர்மானங்கள் விவரம் வருமாறு:

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று 27.2.2006 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரளம் இத்தீர்ப்பை மதிக்காமல், அதற்கு மாறாக ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஆய்வு நடத்த ஐவர் குழுவை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தமிழக அரசின் வழக்கையே திசை திருப்பி, கேரளம் நிறைவேற்றிய சட்ட திருத்தத்துக்கு உட்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இப்பிரச்னையில் உச்ச நீதிமன்றம் சார்பிலும், 7 பேர் கொண்ட மிட்டல் குழு சார்பிலும் ஏற்கெனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அணை வலுவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்று தி.மு.க. உறுதியாகக் கருதுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பிறகும், இன்னும் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப முடியாமல், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காலம் தாழ்த்தாமல், அவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதைத் தவிர வேறு எந்தத் தீர்வும் கிடையாது. ஏற்கெனவே உறுதி அளித்தபடி, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சக வாழ்வுக்கு வழி வகுக்கும். எனவே, அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியும் கூட, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள் தொடர் கதையாகவே உள்ளன. இலங்கைக் கடற்படையின் இந்த வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான ஒரு முடிவினை ஏற்படுத்த வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

ராமர் பாலம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், மதவாதக் காரணங்களைக் காட்டி, சேது சமுத்திர திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதற்கான வழக்கை விரைந்து முடித்திட மத்திய அரசு முயல வேண்டும். தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் குறித்து இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கென தனியான திருமணச் சட்டங்கள் இருக்கும் நிலையில், இப்போதைய சட்டத்தின் மூலம் அவர்களது மார்க்க நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இப்பிரச்னை குறித்து இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டல திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி, விரைவில் முடிக்க வேண்டும். சேலம் ரயில்வே கோட்டம் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்