கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் சிவா கேசவன் என்ற வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவர். இந்தியாவின் சார்பில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களில் ஒருவரான சிவா கேசவன், தனக்கு வழங்கப்பட்ட சீருடையிலும், வீரர்களுக்கு இந்திய விளையாட்டு நிர்வாகிகள் செய்து தந்துள்ள வசதிகளிலும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.சிவா கேசவன் மற்றும் அல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் ஜாம்யங் நம்ஜியால் என்பவரும், நெடுந்தூர பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் டாஷி லண்டுப் ஆகியோரும் வான்கூவர் வந்துள்ள இந்திய அணியில் அடங்குவர்.
தரம் குறைந்த சீருடைகளே தனக்கு வழங்கப்பட்டிருந்ததால் இந்த வீரர் துவக்க விழாவில் இந்திய அணிக்கான சீருடை இன்றி கலந்துகொண்டிருந்தார். இந்த சர்ச்சையை அடுத்து இந்திய வீரர்களுக்குத் தேவையான சீருடைகளை கனடாவில் விளையாட்டுப் உபகரணங்கள் விற்கும் இந்தியர் ஒருவர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள ஒரு உள்ளூர் பஞ்சாபி வானொலி மூலமாக இந்திய வீரர்களுக்கு நிதி திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .கேசவன் பயன்படுத்துகின்ற லூஜ் எனப் படும் சறுக்குப் படுக்கை உடைந்துபோய் பழுது பார்க்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து அவர் புதிய சறுக்குப் படுக்கை வாங்க கனடாவில் வாழும் இந்திய சட்டத்தரணிகள் ஐந்து பேர் நாலரை லட்சம் ரூபாய் வரையில் நிதி வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
ஏன் இந்த நிலைமை? ஒரு புறம் கோடிகளில் மிதக்கும் கிரிக்கெட் வீரர்கள் மறு புறம் விளையாட்டு உபகரணங்கள் கூட வாங்க இயலா நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் . சச்சின் டெண்டுல்கர் வெளிநாட்டில் இருந்து ஒரு காரை இறக்குமதி செய்தால் உடனே போட்டி போட்டுக் கொண்டு வரி சலுகை அளிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள், மற்ற விளையாட்டுகளை ஊக்கப் படுத்த அது போன்ற சலுகைகளை அளிக்க முன் வருவதில்லை.
சமீபத்தில் தேசிய விளையாட்டான ஹாக்கி வீரர்களும் சம்பள பிரச்னைக்காக போராட்டம் நடத்தி உலகக் கோப்பை போட்டிக்கான பயிற்சி முகாமை புறக்கணித்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு சஹாரா நிறுவனம் அந்த தொகையை அளிக்க முன்வந்ததை அடுத்து ஹாக்கி வீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.
இந்தியன் பிரீமியர் லீக் , சாம்பியன் லீக் என வருடம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தினாலும் ஸ்பான்சர் செய்ய தவம் கிடக்கும் நிறுவனங்கள் மற்ற விளையாட்டுகளை கண்டு கொள்வதே இல்லை. இந்திய அரசும், மாநில அரசுகளும் இதை கண்டு கொள்வதாக தெரிய வில்லை . காரணம் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் எம்.பி க்கள் கூட ஏதாவது ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவோ மற்றும் வேறு ஏதாவது பொறுப்பிலோ இருந்து வருகின்றனர். இந்திய அரசும் பெயர் அளவில் விளையாட்டுக்கென ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி சம்பிரதாயத்துக்காகவே செயல் படுத்தி வருகிறது.
ஒலிம்பிக் வரலாற்றில் தங்க பதக்கம் வென்று இந்தியாவுக்கு கவுரவம் பெற்றுத்தந்த துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா கூட சமீபத்தில் இந்திய விளையாட்டு துறைமீது கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார். கடந்த 2008 ம் ஆண்டில் பெய்ஜீங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்காதா என்று எல்லாரும் பெருமூச்சு விட்ட போது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் பிந்த்ரா என்பது குறிப்பிடத் தக்கது.
ஹாக்கி மற்றும் ஒலிம்பிக் வீரர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் ஸ்பான்சர் தொகைக்கு வருமான வரி விலக்கு, கலால் வரி விலக்கு போன்ற சலுகைகள் இந்திய அரசால் அறிவிக்கப் பட்டாலன்றி கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகள் அழிந்து போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




