இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

செல்வி மம்தாவுக்கு ஜெயலலிதா, கருணாநிதி பாராட்டு

E-mail அச்செடுக்க
2010-11 ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2010-2011-ம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும்போது, நெருக்கடியான நேரத்தில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தாது, தொலைநோக்கு பார்வையையும் குறுகியகால தேவைகளையும் சமமாகவும், மிகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருப்பதை பாராட்டியாக வேண்டும். ரெயில்வே தனியார் மயமாக்கப்படமாட்டாது என்று மம்தா பானர்ஜி கூறி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. கிராமத்தில் உள்ள பாமரகள்வரை ரெயில் சேவையைக் கொண்டு போய் இருக்கிறார். புதிய ரெயில்கள், பயணிகள் வசதிக்கு கூடுதல் நிதி, ரெயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் தயாரிப்பு ஆலைகள் அமைப்பது ஆகியவை நிச்சயம் பொதுமக்களால் பாராட்டப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை ரெயில்வே பட்ஜெட்டில் நல்லதும்,கெட்டதும் கலந்திருக்கிறது.பெரம்பூர் ரெயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நவீனப்படுத்துவது, அங்கு 2-வது உற்பத்தி பிரிவு தொடங்குவது ஆகியவை வரவேற்கத்தக்கது. அ.தி.மு.கவின் கோரிக்கைகளான இரட்டை ரெயில் பாதை அமைப்பது, சென்னை பறக்கும் ரெயில் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ரெயில் பாதையை மின்மயமாக்குவது,அகல ரெயில் பாதை ஆகியவை ரெயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிஇருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை-புதுச்சேரி இடையே மாமல்லபுரம் வழியாக கடற்கரையையொட்டி ரெயில் பாதை அமைக்க ஒப்புதல் அளித்திருந்தால் தமிழக மக்கள் வெகுவாகப் பாராட்டி இருப்பார்கள். ரெயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமையும். சுருங்கச், முட்டையில் நல்லது பாதி, கெட்டது பாதி என்பது போல ரெயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் அதேபோல் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய ரெயில் பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெறும் வணிகக் கண்ணோட்டத்தோடு மட்டுமே நோக்காது, ஒரு சமூகப் பார்வையோடு கருதவேண்டும் என்ற கொள்கை கோட்பாட்டை சென்ற வருட ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்த மத்திய ரெயில்வேஅமைச்சர் மம்தா பானர்ஜி,வரும் நிதியாண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டிலும் இதை மீண்டும் வலியுறுத்தி உறுதிப்படுத்தி நாடு முழுவதும் புதிய ரெயில்வே பாதைகளையும், ஏற்கனவே இருக்கின்ற ரெயில் பாதைகளுக்கு இரண்டாவது பாதை அமைக்கவும் அறிவித்து இருப்பதை நான் மிகவும் பாராட்டுகின்றேன். தமிழகத்தைப் பொறுத்தவரையில், மதுரை-கோட்டயம்,மதுரை-தூத்துக்குடி,திண்டுக்கல்-குமுளி,ராமேஸ்வரம்-தனுஷ்கோடி போன்ற புதிய ரெயில் தடங்களை அறிவித்ததற்கு தமிழக அரசின் சார்பில் எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணகிரி-சாம்ராஜநகர் ரெயில் பாதைக்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி ரெயில் பாதை 2009-2010-ம் ஆண்டிலேயே முடிக்கப்படும் என்றும், சேலம்-நாமக்கல் ரெயில் பாதை பணிகள் 2010-2011-ம் ஆண்டில் முடிக்கப்படும் என்றும், கடலூர்-சீர்காழி, வேலூர்-விழுப்புரம், போத்தனூர்-கோவை ஆகிய ரெயில் பாதை அகலப் படுத்தப்படும் பணிகள் 2009-2010 ஆண்டில் முடிக்கப்படும் என்றும், மயிலாடுதுறை-திருவாரூர், திண்டுக்கல்-பழனி ஆகிய ரெயில்பாதை அகலப்படுத்தும் பணிகள் 2010-2011-ம் ஆண்டில் முடிக்கப்படும் என்றும், நீடாமங்கலம்-மன்னார்குடி ரெயில் பாதைப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. சென்னை துரித ரெயில்பாதை திட்டத்தின்கீழ், வேளச்சேரியிலிருந்து புனித தோமையர் மலை வரை விரிவுபடுத்தும் திட்டம் 2012 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. திருவாரூர் ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்படும் என்பதும், சேலம், திருச்சி கோட்டை மற்றும் திருத்தணி ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்பதும் உவகை அளிக்கிறது. சென்னை-சூலூர்பேட்டை, சென்னை-வேளச்சேரி, சென்னை-திருத்தணி, சென்னை-அரக்கோணம் ஆகிய புறவழி தடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் ரெயில் சேவையை அதிகரித்து இருப்பது சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினமும் வந்து பணிபுரிபவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று கருதுகிறேன். மேலும் தமிழகத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரெயில் சேவைகளை அறிவித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. சென்னையில் ரெயில்வே துறை மூலம் ஒரு விளையாட்டு பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றும், சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை நவீனப்படுத்தப்பட்டு, மேலும் ஒரு அலகு நிறுவப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பயணிகள் கட்டணங்களையும், சரக்கு கட்டணங்களையும் உயர்த்தாமல் ரெயில்வே பட்ஜெட்டை அளித்துள்ள மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தாவுக்கு எனது பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்