அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு என்றால் தலைநகர் சென்னையும், சென்னையைச் சுற்றியுள்ள சில மாவட்ட தலை நகரங்களே கவனத்திற்கு வருகின்றன. காவிரிக்கு தெற்கே கன்னியாகுமரி வரை 20 நாடாளுமன்ற தொகுதிகளும், உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை மத்திய அமைச்சர்கள் மறந்து விடுகிறார்கள்.
தென் மாவட்டத்தில் ஒரு ரெயில்வே தொழிற்சாலை தொடங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மம்தா பானர்ஜியை சந்தித்து வற்புறுத்த வேண்டும். இதைச் செய்யத்தவறினால் அவர்களது அலுவலகம்முன் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்துவோம்.
சென்னை-கோவை அதிவேக டோரன்டோ ரெயில் விடப்படுவதுபோல மதுரை-சென்னை இடையே டோரன்டோ ரெயில்விட வேண்டும். நாகர்கோவிலிருந்து மதுரை,ஓசூர் வழியாக பெங்களூக்கு வாராந்திர ரெயிலுக்கு பதிலாக தினசரி ரெயில் விட வேண்டும்.
சென்னை ரெயில்பெட்டி தொழிற்சாலையில் புதிதாக 7 பிரிவுகள் உருவாக்கவும்,சென்னையில் ரெயில்வே சார்பில் விளையாட்டு அகாடமி தொடங்குவது, ரெயில்வேக்கு இடம் வழங்குபவர்களுக்கு வேலை தருவது, புற்று நோயாளிகளுக்கு இலவச பயணம், அனைத்து ஊராட்சி அளவில் ஈ-டிக்கெட் பெறும் வசதி போன்ற அறிவிப்புகள் “மின் மினி” போல மம்தாவின் அறிவிப்பில் மின்னினாலும் தென்னக ரெயில்வேயின் திட்ட அறிக்கைகளில் பல கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதே அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கருத்தாகும் என்று கூறியுள்ளார்.