மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செல்வி மம்தா பானர்ஜி அவர்கள் தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட்டில் கட்டணம் உயர்த்தப்படாதது, ரெயில்வே துறை தனியார்மயமாகாது என்ற அறிவிப்பு, ரெயில்வே வாரியத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்திட அனுமதி, புற்று நோயாளிகளுக்கு இலவசப் பயணம்,10 இடங்களில் ரெயில்வே மருத்துவமனைகள்,ரெயில்வே பணியாளர்களுக்கு வீடுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள்,தமிழகத்திற்குப் புதிய விரைவு ரெயில் மற்றும் சுற்றுலா ரெயில் சேவைகள் ஆகியவை பாராட்டுக்குரிய அறிவிப்புகள் ஆகும்.
ரெயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழ்நாட்டின் நீண்டநாள் கோரிக்கையான விழுப்புரம்-திருச்சி-திண்டுக்கல் 272 கி.மீ. தூரம் இரட்டை அகல ரெயில்பாதை அமைத்தல், செங்கல்பட்டு- விழுப்புரம் 103 கி.மீ. மீட்டர் கேஜ் பாதையை இரண்டாவது அகல ரெயில்பாதையாக மாற்றுதல் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்தில் நடைமுறையிலுள்ள அகலப் பாதை திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் காலதாமதம் ஆகின்றன. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றி எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோன்று தென்மாவட்ட மக்கள் பயன்பெறத்தக்க கூடுதல் ரெயில் சேவை பற்றிய அறிவிப்பும் இல்லை.
சென்னை-கோவை பகல்நேர டோரன்டோ ரெயில்சேவை,நீடாமங்கலம்-மன்னார்குடி புதிய ரெயில் தடம், சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு ரெயில்கள்,பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலை நவீனமயமாக்கல் போன்ற வரவேற்கத்தகு அம்சங்கள் இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ரெயில்வே பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது