பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக முறைகேடுகளில் ஈடுபடுவதால் இடைத்தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும், திமுக வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தொண்டர்கள் பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதிகளில் வெள்ளிக் கிழமை இரவு வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, அதனைத் தடுத்த பாமக தேர்தல் பணிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் பாமக தொண்டர்களைத் தாக்கியுள்ளனர் என்று கூறினார்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்தப் பொருள்கள் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கிடங்கின் முன் திரண்ட பாமகவினர், கிடங்கைத் திறக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என்றும் ராமதாஸ் கூறினார்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பென்னாகரம் தொகுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் நன்றாக ஆய்ந்து திமுக தொண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், திமுக வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




