ரியாத் - இந்தியா-சவுதி அரேபியா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் பயங்கரவாதிகளை ஒப்படைப்பது, தண்டனை கைதிகளை பரிமாற்றம் செய்வது ஆகியன அடங்கும்.
பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ரியாத்தில் உள்ள சவுதி மன்னர் மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பாதுகாப்பு, ராணுவம் ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து விவாதித்தனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அல்கொய்தா மற்றும் தாலிபான் போராளிகளின் தீவிர நடவடிக்கைக் குறித்து இந்த பேச்சு வார்த்தையின் போது பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கும், மன்னர் அப்துல்லாவும் 10 முக்கியமான ஒப்பந்தங்களில் கூட்டாகக் கையெழுத்திட்டனர்.
தீவிரவாதிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கை, தண்டனை பெற்ற கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம், கூட்டாக முதலீட்டு நிதியம் அமைப்பது, எரிசக்தி துறையை மேம்படுத்துவது உள்ளிட்டவை இதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
முன்னதாக, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் சவுத் அல் பைசல் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானில் பாதுகாப்பின்மையும், ஒற்றுமையின்மையும் காணப்படுவது கவலை அளிக்கிறது. பாகிஸ்தான் எங்கள் நட்பு நாடு. அதனால் அங்கு நிலவும் அபாயகரமான சூழல் குறித்து மிகுந்த கவலை கொண்டிருக்கிறோம். அல்கொய்தா மற்றும் தலீபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமாளிக்கவேண்டும். எங்களுக்கும், தாலிபான்-அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே எந்த வித தொடர்பும் கிடையாது. எப்போது, அல்-கொய்தாவினருக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தார்களோ, அப்போதே நாங்கள் தாலிபான்களுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டோம்," என்று தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




