பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. சார்பில் இன்பசேகரன்,அ.தி.மு.க. சார்பில் அன்பழகன், பா.ம.க.சார்பில் தமிழ்க்குமரன், தே.மு.தி.க. சார்பில் காவேரி வர்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது.வேட்புமனுக்களை மாவட்டக் கலெக்டர் அமுதா மற்றும் பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் டியூக் பொன்ராஜ் ஆகியோரிடமும் இரு இடங்களிலும் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
முதல் நாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை.தி.மு.க வேட்பாளர் இன்பசேகரன். பா.ம.க. வேட்பாளர் தமிழ்க்குமரன். தே.மு.திக.வேட்பாளர் காவேரி வர்மன் ஆகியோர் வருகிற 5-ந் தேதி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள்,
அ.தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் இன்று பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில்வேட்பு மனுதாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
மனுதாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 10-ஆம் தேதி ஆகும்.11-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாபஸ்பெற 13-ஆம் தேதி கடைசிநாளாகும். வாக்குப்பதிவு 27-ஆம் தேதி நடக்கிறது. 30-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.போட்டியிடும் பொது வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ. 10 ஆயிரமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ரூ, 5 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
மனுதாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதியில் உள்ள ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிவு செய்ய வேண்டும்.
வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் கலெக்டர் அலுவலகம் மற்றும் பென்னகாரம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காமிராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைப்படியே வர வேண்டும் என்றும் கூட்டமாக வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




