மத்திய பட்ஜெட்டில் பெட்ரோலிய பொருள்களுக்கு 7 சதவீதம் கூடுதல் உற்பத்தி வரி விதிக்கப்பட்டது.இத்துடன் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் லிட்டருக்கு தலா 1 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.2.50 லிருந்து ரூ.3 வரை மாநிலத்துக்கு மாநிலம் உயர்ந்துள்ளது. எனவே இந்த விலை உயர்வை குறைக்கக்கோரிதி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகள் வற்புறுத்தின. தமிழக முதல்வர் கருணாநிதி இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.
அதில் டீசல் விலையை சற்று குறைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகம் மற்றும் மே.வங்காளத்திலும் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் டீசல் விலையை மட்டும் குறைக்க முன்வந்துள்ளது. பட்ஜெட் விவாதத்துக்கு பதில் அளிக்கும்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த விலை குறைப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




