புதுடெல்லி: இந்திய ராணுவத்தினருக்கு தர (ரேங்க்) அடிப்படையில் ஒரே சீரான சம்பளம் வழங்குவதாக முன்னுக்கு பின் முரணான தகவலை பிரதமர் கூறி அதன் மூலம் பாராளுமன்றத்தின் உரிமையை மீறி விட்டார் என பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி பேசுகையில், `ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு `ரேங்க்' அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஒரே ரேங்கில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளுக்கு வெவ்வேறு விதமான சம்பளம் வழங்கப்படுகிறது' என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங், `ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டாம். ஒரே `ரேங்க்', ஒரே சம்பளம் என்ற அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது' என்றார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதாகவும் மன்மோகன் சிங் அரசு மீது அத்வானி குற்றஞ்சாட்டினார். அதையும், பிரதமர் மறுத்து பதிலளித்தார். இந்த சூழ்நிலையில், பா.ஜனதா கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் அத்வானி உரையாற்றினார். அக்கூட்டத்தில் அத்வானி பேசிய விபரங்களை வெங்கையா நாயுடு நிருபர்களிடம் விளக்கினார்
ராணுவ வீரர்கள் மற்றும் ஜே.சி.ஓ. அதிகாரிகளுக்கு பென்சன் தொகையை உயர்த்துவதாக சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்பை அமல் படுத்தி விட்டதாக பிரதமர் பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால், அது போன்ற எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. ஒரு வீரர் கூட கூடுதல் பென்சனை பெறவில்லை.என முன்னாள் ராணுவத்தினருக்கான சங்கத்தின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சத்பீர் சிங் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே, பாராளுமன்றத்துக்கு தவறான தகவலை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அதன் மூலமாக, பாராளுமன்றத்தின் உரிமையை பிரதமர் மன்மோகன் சிங் மீறி விட்டார். இது, மிகவும் முக்கியமான பிரச்சினை. பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பாக, அந்த விவகாரம் குறித்து முழுமையாகவும் சரியாகவும் ஆய்வு செய்திருக்க வேண்டும். அதன் பிறகே பாராளுமன்றத்தில் பேச வேண்டும். இந்த உரிமை மீறலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வோம்.
மேலும் காஷ்மீர் பிரச்சினை மற்றும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் அமெரிக்க நெருக்கடி ஆகியவை குறித்து பிரச்சினை எழுப்பப்படும். நம்முடைய குற்றச்சாட்டு, அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல. சர்வதேச நெருக்கடிக்கு அடி பணியும் மத்திய அரசுக்கு எதிராகவே நம்முடைய குற்றசாட்டுகளை கூறுகிறோம். காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு தடுமாறிக் கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்களை காஷ்மீருக்கு திரும்புமாறு உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அழைக்கிறார். இதன் மூலமாக, காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் அதிக அளவில் வருவார்கள். அதன் தொடர்ச்சியாக, தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அத்வானி கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




