"மக்களுக்கான உண்மை ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலிலிருந்து வன்முறையை ஒழிக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று(சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்."அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருப்பதும், அதையொட்டி கருத்துக்கள் தெரிவிப்பதும், விமர்சிப்பதும் இயல்பானது. ஆனால், சமீப காலமாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு, ஊடகங்களின் செய்திகளுக்கு அவற்றின் அலுவலகங்களை முற்றுகையிடுவதும், தாக்குவதும் அதிகரித்து வருவது கவலை அளிக்கக் கூடியது மட்டுமல்ல. கடும் கண்டனத்துக்குரியது.
அனைத்து அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும், எந்நேரமும் பாதுகாப்பு தருவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. பாஜக அலுவலகம் கமலாலயம் தாக்கப்பட்டது, சத்தியமூர்த்தி பவன் முற்றுகையிடப்பட்டது. மதுரையில் ஜனதா கட்சி அலுவலகம், தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது என ஜனநாயக நெறிமுறைகளை தாண்டிய வன்முறை அரசியல் கட்சி தொண்டர்கள் இடையே ஒழுங்கையும், நல்லிணக்கத்தையும், குழி தோண்டி புதைப்பதாக உள்ளது.
வன்முறை எந்த வடிவில் இருந்தாலும், அதை அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சி வேறுபாடுகளை தாண்டி கண்டிக்க வேண்டும். பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் இருந்து வன்முறை ஒழிக்கப்பட்டால் தான் மக்களுக்கான உண்மை ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற முடியும்.
கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். வன்முறை செயல்களில் ஈடுபடுபவர் மீது அரசு, கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
சமீபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த மார்க்ஸிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து அச்செய்தியை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சி அலுவலகமும் அதைத் தொடர்ந்து மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகமும் கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




