"மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்த 3 ஆண்டுகளோடு, தற்போது மேலும் 3 ஆண்டுகள் தாமதம் ஆகும்" என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் கடந்த 2008-09 ஆம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி 100 மத்திய கல்வி நிறுவனங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. "இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கென கூடுதல் இடங்களை உருவாக்கி, அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகே இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும்" என உச்ச நீதி மன்றம் கூறி இருந்தது. இதற்கு 3 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டிருந்தது.
2011-12 ஆம் கல்வி ஆண்டுக்குள் அந்த நிறுவனங்கள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கூடுதல் இடங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான உள் கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்கு கால தாமதம் ஏற்படுவதாலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மேலும் 3 ஆண்டுகள் ஆகும் என மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி பசந்த் குமார் மொஹந்தி கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து வருகின்றன. இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அந்த நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இது போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும்.
எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், மத்திய கல்வி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கும் விதமாகவும், இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர மேலும் 3 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என மொஹந்தி கூறினார். இதற்கான திருத்தம் தற்போது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், "இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின் வாங்காது. நிர்ணயிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குள்ளாகவே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்குள்ளாகவே கூட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திறன் வாய்ந்தவையாக இருக்கக்கூடும். அத்தகைய நிறுவனங்களில் உடனடியாக இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்" என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




