மீன் வரத்து குறைந்ததாலும், போதிய விலை கிடைக்காததாலும், ஒரு காலத்தில் செல்வம் கொழித்த மத்தி மீன் கருவாடாக மாற்றப்பட்டு கோழித்தீவனத்திற்கு விற்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.கடலூர் மாவட்டம், தமிழகத்தில் அதிக அளவில் மீன் பிடிக்கப்படும் இடங்களில் முன்னணியில் உள்ளது. 48 கி.மீ. நீளக் கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்படுகிறது. டிசம்பர் முதல் ஏப்ரல் 15 வரை அபரிமிதமாகக் கடலூரில் மீன்கள் கிடைக்கும். குறிப்பாக மத்தி மீன்கள் அதிக அளவில் கிடைத்து வந்தன. மத்தி மீன்கள் பிடிப்பதற்காக மட்டும் கடலூரில் 250 இயந்திரப் படகுகள் உள்ளன. சுனாமிக்கு முன்னால் கடலூரில் நாளொன்றுக்கு 400 முதல் 500 டன்கள் வரை மத்தி மீன்கள் கிடைத்தன.
இவை அனைத்தும் தினமும் 80 முதல் 100 லாரிகள் வரை கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. 50 கிலோ கொண்ட ஒரு பெட்டி மத்தி மீனுக்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை கிடைத்து வந்தது. ஆனால் சுனாமிக்குப் பின் மத்தி மீன் பிடிபடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் பிறமாநிலங்களில் இருந்து வந்து மத்தி மீன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் எண்ணிக்கை தற்போது 20 பேராகக் குறைந்து விட்டதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். விலையும் 50 கிலோ பெட்டி ரூ. 500 முதல் ரூ. 600 வரை குறைந்து விட்டது. மத்தி மீன்கள் பிடிக்கச் சென்று பலநாள்கள், ஒரு கிலோ கூடக் கிடைக்காமல் திரும்பிய நாள்களும் உண்டு என்கிறார்கள் கடலூர் மீனவர்கள்.
இதனால் கேரளம், கர்நாடக மாநிலங்களில் இருந்து மீன் வியாபாரிகள் கடலூர் வந்து மத்தி மீன்கள் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நிலை உருவாகி இருப்பதால், பல வியாபாரிகள் கடலூருக்கு மீன்வாங்க வருவதை நிறுத்திக் கொண்டு விட்டதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள்.
விற்பனை ஆகாத மத்தி மீன்கள் அனைத்தும், கடலூரிலேயே கருவாடாக மாற்றப்படுகிறது. இந்தக் கருவாடு மக்கள் உண்ணும் தரம் கொண்டது அல்ல. எனவே கோழித் தீவனத்தில் கலப்பதற்கு வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. சித்தூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட, கோழிப் பண்ணைகள் நிறைந்த பகுதிகளில், இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். அதுவும் விலை கிலோவுக்கு ரூ. 18முதல் ரூ. 20 வரைதான்.
இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், "கடலூரில் பொதுவாகவே மீன் வரத்து குறைந்து விட்டது. மீன் பிடித் தொழில் சூதாட்டம் போல் ஆகிவிட்டது. எப்போது மீன் கிடைக்கும், எப்போது கிடைக்காது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. குறிப்பாக கடலூர் மீனவர்களை வாழ வைத்துக் கொண்டு இருந்த மத்தி மீன், தற்போது அதிகம் கிடைப்பது இல்லை.
கடலூரில் மத்தி மீனை பலர் சாப்பிடுவதில்லை. எனவே பிற மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மத்தி மீன் கருவாடு தயாரிக்கும் தொழிலில் 500 பேர் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியமே கிடைக்கிறது" என்கிறார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




