இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காவல்துறை சீர்திருத்த மசோதா குறித்து மக்கள் கருத்து கேட்பு!

E-mail அச்செடுக்க
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக காவல் துறை சீர்திருத்த மசோதா குறித்து பொது மக்களின் கருத்துகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"காவல் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, "தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த மசோதா 2008" என்ற பெயரில் கடந்த ஆண்டு மே 14 - ம் தேதி சட்டப்பேரவையில் காவல்துறை சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் குறிப்பிடத்தக்க பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

"அதிகாரிகள் மாற்றம் தொடர்பான முடிவை எடுக்க தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "டி.எஸ்.பி. மற்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாற்றம் செய்யும் பொறுப்பு இந்த அமைப்பினைச் சாரும்" எனவும், "டி.எஸ்.பி.க்கு மேல் உள்ள அதிகாரிகளை மாற்றுவதற்கான பரிந்துரைகளை இந்த அமைப்பு அளிக்கலாம்" என்பது மசோதாவில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் அம்சங்களை ஆராய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை எழுப்பின. இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.), டி.சுதர்சனம் (காங்கிரஸ்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்றது. கூட்டத்துக்குத் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் முடிவில், "மசோதாவில் உள்ள அம்சங்களை மேலும் ஆராய வேண்டியுள்ளது. எனவே, 2 மாதங்களுக்குப் பின் குழு மீண்டும் கூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மசோதாவை பொது மக்கள் பார்வைக்கு விட்டு கருத்துக் கேட்கப்பட உள்ளது. சட்டப்பேரவைச் செயலகத்தின் இணையதளத்தில் இந்த மசோதா வெளியிடப்படும்'' என்று முடிவெடுக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்