பென்னாகரம் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரை சோதனையிட வேண்டும் என துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் கூறியதையடுத்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பென்னாகரம் ஒன்றியம், தின்னப்பட்டிக்கு நேற்று(திங்கள்கிழமை) சென்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கார் நத்தஹள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. கார் கண்ணாடிகளை இறக்கிய ராமதாஸ், தான் பாமக நிறுவனர் ராமதாஸ் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்த துப்பாக்கி ஏந்திய 2 காவல்துறையினர், காரை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதைக் கண்டித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காரிலேயே மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது அவருடன் சென்ற 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் தருமபுரி-பென்னாகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 40 நிமிடம் மறியல் நீடித்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நின்றன.
சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சுதாகர் வருகை தந்து, நடந்த நிகழ்வுக்கு டாக்டர் ராமதாஸிடம் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பென்னாகரம் தொகுதி பாமக பொறுப்பாளர் தி.வேல்முருகன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, "பிரசாரத்துக்கு வந்த பா.ம.க. நிறுவனரின் கார் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. காரை சோதனை செய்து பா.ம.க.வுக்கு அவமானத்தை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சி செய்துவருகின்றனர்.
தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சென்ற கார் மட்டும் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை" என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




