இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

E-mail அச்செடுக்க
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா அறிமுகத்தால் மக்களவையில் நேற்று(திங்கள்கிழமை) முழுவதும் அமளி நிலவியது. அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக ஸ்தம்பித்தன. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. மக்களவையில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குப் பெரும்பான்மை இருந்தபோதிலும், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக மகளிர் மசோதாவை ஆதரிப்பதாகத் தெரிவித்ததால் மிக எளிதாக மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமாஜவாதி  கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி உறுப்பினர்களும் மகளிர் மசோதாவிற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நேற்று அவை கூடுவதற்கு முன்பாகவே அவை நடவடிக்கைகள் தொடர்பான காகிதங்களைக் கிழித்து மக்களவைத் தலைவர் இருக்கையை நோக்கி சமாஜவாதி கட்சித் தலைவர் ஷைலேந்திர குமார் வீசினார். அவை கூடியதும் தற்போதைய நிலையிலேயே இந்த மசோதா அறிமுகம் செய்வதற்கு இக்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமளி நிலவியது.  ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் தங்கள்  கட்சி உறுப்பினர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை  முற்றுகையிட்டனர். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேஹாதுல் கட்சியின் ஒரே உறுப்பினர் எம். அஸதுதீன் ஓவாய்சியும் தனது  எதிர்ப்பைக் காட்ட மக்களவை இருக்கையை முற்றுகையிட்டார்.

உறுப்பினர்களின் கோஷம் வலுத்த நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிக சத்தமாக பாடினர். "நாங்கள் என்றாவது ஒரு நாள் இதிலிருந்து மீண்டு வருவோம்" என்ற அர்த்தம்  தொனிக்கும் பாடலை அவர்கள் பாடிக் கொண்டேயிருந்தனர்.

இதையடுத்து, அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் உறுப்பினர்களின் எதிர்ப்பு வலுத்தது. பின்னர் அவை கூடியதும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாததால் பிற்பகல் 3 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக அவை துணைத் தலைவர் கரிய முண்டா கூறினார். பின்னர் அவை கூடியபோதும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாததால் மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இறுதியில் 5 மணிக்கு அவை கூடியது. அப்போதும் உறுப்பினர்களின் பிடிவாதம் தளராததால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவை நடவடிக்களை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக கரிய முண்டா அறிவித்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்