"ஆசிய-பசிபிக் நாடுகளில் இந்தியாவில் தான் பெண்கள் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது" என ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட(யு.என்.டி.பி.) ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
பாகிஸ்தான், வங்க தேசம், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்கள் சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இது தொடர்பாக யு.என்.டி.பி. வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
"இந்தியாவில் பெண்கள் பிறப்பு விகிதம் 48.2 சதவீதம் ஆகும். ஆனால் இந்த அளவு பாகிஸ்தானில் 48.5 சதவீதமாகவும், வங்க தேசத்தில் 48.8 சதவீதமாகவும், ஜப்பானில் 51.1 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அதே சமயம் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் 61 லட்சமாகவும், வங்க தேசத்தில் 32 லட்சமாகவும் இருந்தது.
இந்தியாவில் 1990-ல் 1000-க்கு 83 குழந்தைகள் சாவு என்றிருந்த குழந்தைகள் இறப்பு விகிதம், 2006-ல் 1000-க்கு 57 ஆக குறைந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 0.3 சதவீதம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15 முதல் 49 வயதிற்குட்பட்டவர்கள். எச்.ஐ.வி. பாதிப்பு பாகிஸ்தானில் 0.1 சதவீதமாகவும், வங்க தேசத்தில் 0.5 சதவீதமாகவும் உள்ளது என அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(திங்கள்கிழமை) டெல்லியில் அறிக்கையை வெளியிட்ட, யு.என்.டி.பி. நிர்வாகியும் முன்னாள் நியூசிலாந்து பிரமருமான ஹெலன் கிளார்க் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, "ஆய்வு அறிக்கையின் படி உலகில் மிகவும் ஏழ்மையானவர்களில் 10-ல் 6 பேர் பெண்களாவர். பெரும்பாலான வன்முறைகளுக்கு பெண்களே இலக்காகிறார்கள். இந்தியாவை பொருத்தவரை பெண்கள் விஷயத்தில் இரட்டை நிலையே காணப்படுகிறது. பெண்கள் மேம்பாட்டுக்கென பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இங்கு காணப்படும் நிலைமைகள் அதற்கு நேர் மாறாக உள்ளன.
குடும்ப வன்முறைகளினால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவது ஆசிய நாடுகள் முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது. ஆண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொள்ளும் அக்கறையான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்.
இந்தியாவில் விவசாய வேலைகளில் பெண்களின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது. ஆனால் 7 சதவீத பெண்கள் மட்டுமே சொந்தமாக நிலம் வைத்திருக்கின்றனர்" என்று கூறினார்.
பெண்கள் மேம்பாட்டுக்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் முக்கியமானதாக இருந்தாலும், ஆண்களுக்கு இணையான மதிப்புகள் மற்றும் பாரம்பரிய உரிமைகள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கையை அரசின் சார்பாக ஏற்று கொண்ட திட்டக்குழு உறுப்பினர் சயீதா ஹமீது, "ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றுவது தான் நம் முன் உள்ள முக்கிய சவால்" என கருத்து கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




