இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விவாதம் இல்லையேல் ஆதரவு இல்லை - பாஜக திடீர் பல்டி!

E-mail அச்செடுக்க
"மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33% இடங்களை ஒதுக்கும் மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடத்தாவிட்டால் ஆதரித்து வாக்களிக்கமாட்டோம்" என்று பாரதிய ஜனதா திடீரென தன்நிலைபாட்டை மாற்றி அறிவித்துள்ளது.

"நேற்று(திங்கள்கிழமை) மாநிலங்களவை 5 முறை கூடியபோதும் சுமார் 25 உறுப்பினர்கள் எழுப்பிய ரகளையைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுத்தரப்பு வேடிக்கை பார்த்தது. இதை பாரதிய ஜனதாவால் ஏற்க முடியவில்லை" என்று பாஜக மாநிலங்களவை துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

"மகளிருக்கு இட ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மசோதா என்பது சாதாரணமானதல்ல. அரசியல் சட்டத்தையே திருத்துவது. இந்த நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி அமைக்கக்கூடிய தன்மை கொண்டது. இத்தகைய மசோதாவை நிறைவேற்றுவதற்கு அரசு போதிய உத்திகளுடனும் ஏற்பாடுகளுடனும் அவைக்கு வந்திருக்க வேண்டும்.

மசோதாவை ஆதரிக்கப் போகிறவர்கள் யார்?, எதிர்க்கப் போகிறவர்கள் யார்? என்று அரசுக்கு முன்னரே தெரிந்துவிட்டது. ஆதரவாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு இதை நிறைவேற்றிவிடுவது எளிது என்றுகூட அரசு கருதியது. அதில் தவறு இல்லை. ஆனால் எதிர்ப்பாளர்களை எப்படிச் சமாளிப்பது என்றும் திட்டமிட்டிருக்க வேண்டும். அவை 5 முறை கூடிய போதும் அரசுத்தரப்பில் சமாதான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை.

அரசியல் சட்டத்தை திருத்தி கொண்டுவரும் மசோதா மீது விவாதம் நடத்துவதும் வாக்கெடுப்பு நடத்துவதும் அவசியம். மேலும் கடந்த 15 ஆண்டுகளில் மகளிர் மசோதா ஒரே வடிவில் தாக்கலாகவில்லை. மூன்று வெவ்வேறு வகை மசோதாக்கள் தாக்கலாகியிருந்தன. எனவே இப்போது அரசு நிறைவேற்ற விரும்பும் மசோதா எத்தகையது என்பதை நாடு அறிய விவாதிப்பது அவசியம். விவாதிக்காமல் நிறைவேற்றினால் அது முறையானதுதானா? என்ற சந்தேகம் கூட நாளை எழும்.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான முழுப் பெருமையும் தனக்கே வந்து சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. எனவே பிற கட்சிகளின் கருத்துகளைப் பதிவு செய்யக்கூட அது தயங்குகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்திலும் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது  பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி எங்களைப்போல முன்வந்து ஆதரிக்கவில்லை.

மாநிலங்களவையில் இன்று நடந்தவை துருதிருஷ்டவசமானவை; வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இப்படி நடந்திருக்கவே கூடாது. இந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு 3 வரி கொறடாவைப் பிறப்பித்த முதல் கட்சி பாரதிய ஜனதாதான் என்ற போதிலும் ஆளும் கட்சியினர் எங்களை அழைத்து இந்த மசோதா குறித்துப் பேசவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

அரசியல் சட்டத்துக்குத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதாக இருந்தால் போதிய உறுப்பினர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவைக்கு அன்றைக்கு வந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆதரிக்க வேண்டும்; அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஆதரவும் இருக்க வேண்டும். இதை அரசு மறந்துவிடக்கூடாது.

மகளிர் மசோதாவை பாரதிய ஜனதா முழு மனதோடு ஆதரிக்கிறது. இந்த நாட்டு மகளிரையும் இளைஞர்களையும் மீண்டும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்க பாஜக விரும்பவில்லை. அதேசமயம் மசோதாவைக் குறித்து நாடு அறிய விவாதிப்பது அவசியம்" என்றார் அலுவாலியா.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்