"மக்களைப் போலி வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றிய திருவாங்கூர் ராஜ வைத்திய சாலையின் மருத்துவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் திருவாங்கூர் ராஜ வைத்திய சாலை என்ற பெயரில் விஜயகுமார் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். இவர் அனைத்துவித நோய்களையும் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்வதாகவும், பொதுமக்களிடம் போலியான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாகவும் பல புகார்கள் அவர் மீது எழுந்தன.
மோசடி, மிரட்டல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட விஜயகுமார், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து விஜயகுமாரின் மகன் ஜெகதீஸ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அம்மனுவில், "எனது தந்தை விஜயகுமார் திருவாங்கூர் ராஜ வைத்திய சாலையை நடத்தி வந்தார். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அவர் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் 2008 -ல் தடை விதித்திருந்தது.
இந்தத் தடை அமலில் இருக்கும்போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எனது தந்தையை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளார். உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை குறித்து முழுமையாகப் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு மனதையும் செலுத்தாமல் மாநகர போலீஸ் கமிஷனர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இம்மனு மீதான தீர்ப்பில், "அனைத்துவித நோய்களையும் குணப்படுத்துவதாக விஜயகுமார் பொய்யான வாக்குறுதிகளைத் தொலைக்காட்சிகள் வாயிலாக அளித்துள்ளார். சிகிச்சை என்ற பெயரில் அதிகப் பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களையும் அவர் ஏமாற்றியுள்ளார்.
சிகிச்சைக்கு வழங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களையும் அவர் மிரட்டியுள்ளார். அவரது செயல்கள் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு அவர் பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதி அளிப்பதையோ, ஏமாற்றுவதையோ தடை செய்யவில்லை.
எனவே, திருவாங்கூர் ராஜ வைத்திய சாலையின் வைத்தியரான விஜயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததில் எந்தத் தவறும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




